“But ranged as infantry,
And staring face to face,
I shot him as he at me,
And killed in his place.”
– Thomas Hardy

எல்லாரும் டங்கிர்க் படத்தை கழுவி ஊற்றிக்கொண்டிருக்கும்போது நான் மட்டும் செம சூப்பர் என்று எழுதினால் என் கமெண்டில் போர் தொடுப்பது நோலன் ரசிகர்களாகத்தான் இருக்கும். நோலனுக்கு தமிழ்நாட்டில் அவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அவரிடமிருந்து இப்படியொரு போர் படத்தை எதிர்பார்க்கவில்லை. ஆனால் நோலன் ஏன்? எதற்காக? இந்த படத்தை எடுக்க வேண்டும்? அதில் பேசப்பட்டுள்ள அரசியல் என்ன என்பதை புரிந்து கொள்வது படத்தை விளங்கி கொள்ள உதவும். நோலன் நினைத்திருந்தால் வழக்கம்போல் சிக்கலான திரைக்கதை அமைப்பில் ஒரு கதை எழுதி ஹிட் முடித்திருக்க முடியும். ஆனால் இந்த முறை அவர் தன் அரசியலை பேசும்படியாக ஒரு படத்தை ஏடுத்திருக்கிறார் என்பது என் கருத்து. எனது அறிவுக்கு எட்டிய விடயங்களை இங்கே பகிர்கிறேன். அது சரியா? தவறா? என்பதெல்லாம் ஆரோக்கியமான விவாதத்தை தொடர்ந்து புலப்படும். ஏனென்றால் இன்டஸ்டெல்லார் வந்தபோதும் அந்த படம் யாருக்கும் புரியவில்லை,பிடிக்கவில்லை! பின்னாளில் அந்த படத்தின் மீது எழுந்த பலவேறு விவாதங்கள் மூலமாக அந்த படத்தை புரிந்துகொள்ள முடிந்தது. கிட்டத்தட்ட அவருடைய எல்லா படங்களும் விவாதம் செய்து புதிய கோணத்தில் அணுக கூடியதாக இருக்கிறது. அப்படி யாராவது டங்கிர்க் பற்றி விரிவாக எழுத இது தொடக்கமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

முதலில் டங்கிர்க் யுத்தம். இது பற்றி இணையத்தில் தேடினாலே அதிக தகவல்கள் கிடைக்கின்றன. 1940ல் ஜெர்மனி பெல்ஜியத்தை கைப்பற்றி அதன் வழியாக பிரான்ஸிற்குள் ஊடுருவி கொண்டிருந்த காலம். பிரிட்டிஷ், பிரெஞ்சு, போலந்து, பெல்ஜிய ராணுவங்கள் ஜெர்மனிக்கு எதிராக போராடிக்கொண்டிருந்தன. அப்போது ஜெர்மனி ஆப்ரேஷன் டைனமோ என்னும் ரகசிய தாக்குதலில் ஈடுபட்டது. அதன்படி டங்கிர்க் மற்றும் அதன் சுற்று பகுதிகளில் கூடாரமிட்டிருந்த எதிரி படைகளை தரை, கடல், ஆகாயம் என மூன்று பகுதிகளிலும் சுற்றி வளைப்பது திட்டம். பிரிட்டிஷ், பிரெஞ்சு கூட்டு ராணுவம் முகாமிட்டிருந்த இடம் டங்கிர்க். ஆபரேஷன் டைனமோவிலிருந்து கூட்டுப்படைகள் தப்பிவந்த நிஜ சம்பத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம் டங்கிர்க். இதே யுத்த கதையை முன்னாள் யாரோ ஒருவர் எடுத்ததாக ஒருவர் இணையத்தில் பார்த்துவிட்டு சொன்னார். சில பேர் “மொக்கை படம்” என்று ஒரே வார்த்தையில் முடித்துவிட்டார்கள். ஒரு அறிவாளி ஸ்பீல்பெர்க்கின் “செவிங் பிரைவேட் ரியான்” படத்தின் காப்பி என்று சொன்னார். நோலன் நினைத்திருந்தால் அமெரிக்க சம்பந்தப்பட்ட ஒரு போர் படத்தை (Pearl harbour, Saving private Ryan) எடுத்து ஆஸ்கர் வாங்கியிருக்க முடியும். இன்றுவரை அவருக்கு ஆஸ்கர் வளங்கப்படாதது குறித்து ஹாலிவுட் விமர்சகர்களிடையே பல்வேறு விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அமெரிக்கா சம்பந்தப்படாத ஒரு போர் படம். தனது தாய் நாடான இங்கிலாந்தையும், அதன் வீரர்களையும் நாயக பிம்பத்துக்குள் கொண்டு வரும் ஒரு அமெரிக்க படம்(??) இந்த படத்தில் கூட்டு படைகளிடையே இருந்த பிரச்சினைகளையும் பேசுகிறார். பிரிட்டிஷ் கப்பலில் பிரெஞ்சு வீரர்களை ஏற்றி கொள்ளாதது. வின்ஸ்டன் சர்ச்சிலுக்கும், ராம்ஸிக்கும் இடையே இருந்த முரண்பாடுகள் போன்ற உலகப்போரில் இதுவரை நாம் பார்த்திராத ஐரோப்பிய கதையை சொல்கிறார். நாம் அமெரிக்க கதையை கேட்டு பழக்கப்பட்டவர்கள். அமெரிக்காதான் இரண்டாம் உலக போரின் ஹீரோ என்கிற அளவுக்கு ஹாலிவுட் மாயையை காட்டி விடுகிறது. ஜெர்மனியை வீழ்த்தியது, ஜப்பானில் அணு குண்டு தாக்குதல் போன்ற சம்பவங்கள். ஆனால் அமெரிக்கா இரண்டாம் உலக போரில் கட்ட கடைசியில் நுழைந்து தனக்கான இந்த நாயக பிம்பத்தை ஏற்படுத்தி கொண்டது. ஜெர்மனியில் அமெரிக்கா நுழையும் முன்பே ரஷ்யா பாதி ஜெர்மனியை ஆக்கிரமித்து விட்டது. ஹிட்லர் இறந்த பதுங்கு குழி ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்தது. போலவே, ஜப்பானும் தனது பொருளாதார மூலத்தனமான சீனாவை அடக்கிவைக்க முடியாமல் வீழ்ந்து கொண்டிருந்தது. மாவோ சீனாவை மீட்டது மட்டுமின்றி ஜப்பானுக்கு பிரச்சினைகள் கொடுத்து கொண்டிருந்தார். அமெரிக்கா அணுகுண்டு வீசாவிட்டாலும் ஜப்பான் விழ்ந்திருக்கும் சூழல்தான். இத்தாலியில் நிலைமை வேறு, மக்களே முசோலினியை கொன்று கம்பத்தில் தொங்க விட்டார்கள். ஆக இவ்வளவு சம்பவத்திற்கும் அமெரிக்காவிற்கும் பெரிய அளவில் தொடர்பு இல்லை. நோலன் இரண்டாம் உலக போரின் முக்கியமான திருப்பமாக டங்கிர்க் பற்றி பதிவு செய்கிறார். ஒருவேளை ட்ங்கிருக்கில் கூட்டு படைகள் தோற்றுபோயிருந்தால் இன்றைய வரலாற்றில் நிறைய மாற்றி எழுதபட்டிருக்கும். இரண்டாம் உலக போரில் நடந்த மிகப்பெரிய தப்பித்தல் நடவடிக்கையும் டங்கிர்க் சம்பவம்தான்.

நோலன் இதில் தனது நாடான பிரிட்டிஷ் படைக்கு ஆதரவாக சில விஷயங்களை செய்கிறார். பிரிட்டிஷாருக்கு நாயக பிம்பம் சிறிதேனும் தெரியவே செய்கிறது. தன் மகனுடன் சிறு படகில் மீட்பு நடவடிக்கைக்காக வரும் அப்பா, வானத்தில் ஜெர்மன் விமானங்களை வீழ்த்தி கீழே உள்ள அனைத்து வீரர்களையும் காக்கும் விமானங்கள் ப்ரிட்டிஷாக இருக்கிறது. படத்தின் கிளைமேக்ஸ் காட்சியிடத்தே பிரெஞ்சு கப்பலை தாக்கும் ஜெர்மனி விமானத்தை பிரிட்டிஷ் விமானி தாக்கி அழிப்பார். ஆனால் படத்தின் முதல் இங்கிலாந்து கப்பலில் பிரெஞ்சு காரர்களை அனுமதிக்க மாட்டார்கள். இதை ஒரு சமநிலைக்காக நோலன் செய்திருக்கலாம். இந்த படத்தை நோலன் டார்க் நைட் படங்களுக்கு முன்பே எடுத்திருந்தால் கூட இவ்வளவு வெற்றி பெற்றிருக்காது. தனது உலகளாவிய பிரபலத்துவத்தை வைத்து தன் சொந்த நாட்டின் கதையை சொல்லி இருக்கிறார். ஹாலிவுட்டில் அமெரிக்கா சாராத நாடுகளை பற்றிய போர் படங்கள் நான் பார்த்தவரையில் மிக குறைவு. ஸ்பீல்பெர்க்கின் “munich” திரைப்படம் எப்படி இஸ்ரேலையும், யூதர்களையும் நாயக பிம்பத்தில் வைத்து பார்க்கிறதோ, ஒரு நாட்டின் மீதான அத்து மீறலை நியாய்ப்படுத்துகிறதோ அப்படியான படமல்ல டங்கிர்க். டங்கிருக்கில் வில்லனாக சித்தரிக்கப்படும் ஜெர்மனி ராணுவத்தின் விமானங்களை தவிர ஒரு ஜெர்மன் வீரனின் முகம்கூட காட்டியிருக்கமாட்டார்.

மேலே கூறியுள்ள தாமஸ் ஹார்டியின் வரிகள் நினைவுக்கு வருகின்றன. உயிர் பிழைத்தலின் வலியை நோலன் இதில் பேசியிருப்பதாக பலர் கூறினார்கள். அது கண்டிப்பாக இருக்கிறது என்றாலும் நோலனின் அரசியல் அதிகமாகவே இருக்கிறது. இங்கே படத்தை பார்த்தவர்கள் “மொக்கை” என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிட்டு கடந்து செல்கிறார்களே தவிர அதன் அரசியல் குறித்து பேச தயாராய் இல்லை. சாதாரண ரசிகர்கள் பரவாயில்லை. உலக சினிமா விமர்சகர் என்று சொல்லி கொள்பவர்கள்தான் ரொம்ப சிறுப்பிள்ளைத்தனமாக எழுதுகிறார்கள். ஒருவேளை தற்போதைய நிலவரத்தில் அமெரிக்கா – இங்கிலாந்து இடையே நட்புரீதியான உறவுநிலை நல்ல விதமாக இருப்பதால் நோலனுக்கு ஆஸ்கர் கிடைக்கலாம். அல்லது அமெரிக்கா இல்லாத உலகப்போரா? என வெண்கல கிண்ணம் கூட தராமல் போகலாம். ஆனால் டங்கிருக்கில் நாம் விவாதிக்க நிறைய இருக்கிறது. ஒன்றுமில்லாத அமெரிக்காவுக்கு சோம்படிக்கும் போர் படம் கிடையாது என்பதை மட்டும் உறுதியாக சொல்வேன். கடைசி காட்சியில் அனைவரும் தப்பித்த பிறகு ரயிலில் போய்க்கொண்டிருக்கும்போது செய்தித்தாள் வாசிப்பான் அந்த பிரிட்டிஷ் வீரன். அதில் “நாம் மலைகளோடும்,கடல்களோடும் போரிட்டோம்” என்று ஒரு நீண்ட வசனம் வரும். அந்த வசனம் உண்மையாகவே டங்கிர்க் சம்பவத்திற்கு பிறகு வின்ஸ்ட்டன் சர்ச்சில் பேசியது. டங்கிர்க் இங்கு பலருக்கு புரியாமல் அல்லது பிடிக்காமல் போனதே ஐரோப்பிய போர் வரலாற்றிலிருந்து அது பேசுவதால்தான். வரலாறு தெரியாமல் ஒரு படத்தை அணுகலாம். அந்த படம் வரலாற்றை ஊட்டிவிடும் என்றால்.. நோலன் ஊட்டிவிடும் ஆள் அல்ல. அவர் படத்தை பார்த்தால் குழப்பம்தான் வரும், தூக்கமும் வரும். தூங்குபவர்கள் தூங்குங்கள், குழப்பம் அடைந்தவர்கள் தேடுங்கள்.

குறிப்பு: மேற்சொன்னவற்றில் முரண்பாடோ, பிழைகளோ இருந்தால் விவாதிக்கலாம். எதுவும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதல்ல! ஆனால் விமர்சனம், விவாதம் கொஞ்சமாவது நாகரி்கமாக இருக்க வேண்டும். இது முகப்புத்தகத்தில் நான்தான் பெரிய விமர்சகர் என்று தன் கருத்துக்கு எதிராக இருப்பவர்களை மலிவாக திட்டி, கண்ட வார்த்தைகளை உபயோகப்படுத்தும் மரியாதை தெரிந்த அறிவுஜீவிகளுக்காக…!

 

– Yugen

Advertisements