​முன்பொரு முறை நண்பர் ஒருவர் ஒரு கதை சொன்னார். அதாவது இயேசு பிறந்தபோது அவரை பார்க்க நட்சத்திரத்தை தொடர்ந்து மூன்று ஞானிகள் சென்றார்கள் அல்லவா? அவர்கள் வேறு யாருமல்ல! சேர, சோழ, பாண்டிய மன்னர்கள்தான். அவர்களது நினைவாக அவர்களது பெயர்களின் முதல் எழுத்துக்களான “சே,சோ,பா” வை இணைத்து “சேசோபா” என்று பெயரிட்டனர். அது காலப்போக்கில் “யேசப்பா” ஆகிவிட்டது. இப்போழுதும் பல சர்ச்சுகளில் மக்கள் “சேசப்பா” என்று அழைப்பதன் மூலம் இதை உறுதிப்படுத்தலாம். இது உங்களுக்கு நகைச்சுவையாக தோன்றினால்..! இது என்ன பிரமாதம்? கிழக்கு பதிப்பகத்தில் பிரபாகரன் எழுதிய “குமரிக்கண்டமா? சுமேரியமா?” புத்தகத்தை படித்து பாருங்கள். அபத்த நகைச்சுவையின் பொக்கிஷம்! இது குறித்து சற்று விரிவாகவே எழுத விழைகிறேன். 

குமரிக்கண்டம் அல்லது லெமூரியா! மடகாஸ்கர், ஆஸ்திரேலியா, இந்தியா மூன்று நாடுகளையும் முக்கோண புள்ளியில் இணைக்கும், கிட்டத்தட்ட ஆசிய கண்டத்திற்கு நிகரான பெரிய நிலபரப்பு. இறண்டு பெரிய நதிகளையும், ஒரு பெரிய மலைத்தொடரையும் கொண்ட ஆதிதமிழர்களின் நாடு அது என்றும், கடற்கோளால் அழிந்துவிட்டது என்றும் சொல்கின்றனர். இது உண்மையா? அதற்கு சாத்தியம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆனால் அது பிரச்சினை இல்லை. இந்த புத்தகத்தை எழுதியவர் இந்த கூற்றை மறுப்பதன் மூலம் எதை நிரூபிக்க முயல்கிறார் ர்ன்பதுதான் இதை எழுதுவதற்கான காரணம்!

முதல் பகுதியில் குமரிக்கண்டம் (லெமூரியா) என்ற ஒன்று இல்லை. அப்படி இருந்திருந்தால், மேற்சொன்னபடி அது தென்னிந்தியா, மடகாஸ்கர், ஆஸ்திரேலியாவை இணைக்கும் கண்டமாக இல்லை என்று கொஞ்சம் ஆய்வு தகவல்கள், அதிக க்ற்பனை சேர்த்து நிரூபிக்க முயல்கிறார். அவருடைய கருத்துக்கு எதிரான கருத்துகளை கற்பனை என்கிறார். ஆய்வின் அடிப்படையிலான முடிவை ஊகமாக சொல்லலாமே தவிர உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் இவர் நேரில் கண்டது போல உறுதியான முடிவில் இருக்கிறார்.

இரண்டாவது, தமிழர்கள் யார்? என ஆராய்கிறார். தமிழர்களின் ஆதி வாழ்வியல் தமிழ்நாட்டில் இல்லை. அவர்கள் புலம்பெயர்ந்து வந்தவர்கள் என்று வழக்கம்போல குருட்டாம்போக்கான நிரூபணம் தருகிறார். அப்படியெனில் தமிழர்கள் எங்கிருந்து வந்தார்கள்?

மூன்றாவது பாகத்தில் விளக்குகிறார். தமிழர்கள் பண்டைய நாகரிகமான மெசபடோமியா (சுமேரியா) நாகரிகத்தினை சேர்ந்தவர்கள் என்கிறார். இதற்கு மட்ச புராணம், மனு தர்மம் போன்றவற்றில் இருந்து சில ஆதாரங்களை காட்டுகிறார். அதுசர் இவையெல்லாம் தமிழர்களின் நூல்கள் அல்லவே? இதை எப்படி சான்றாக கொள்ளமுடியும்? மேலும் தமிழர்களின் நாகரிகம் சிந்து சமவெளி இல்லையா? என்று உங்களுக்கு தோன்றலாம்! (எனக்கும் அப்படிதான் தோன்றியது!!)

அதற்கும் பதில் சொல்கிறார். சுமேரிய நாகரிகம் அழிவுற்ற காலத்தில் நீங்கள் (தமிழர்கள்) கப்பலில் தப்பித்து நேரடியாக தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டீர்கள். கப்பலில் வரமுடியாத மற்ற சுமேரியர்கள் (ஆரியர்கள்) தங்களது நூல்கள், படைப்புகளை (!?) பத்திரமாக எடுத்துக்கொண்டு பல்லாயிரம் வருடங்கள் பயணித்து மெலூஹாவில் (சிந்து சமவெளி) கூடாரம் போட்டார்கள் என்கிறார். ஆக, இது முதற்கொண்டு ஆரியர்களின் அனைத்து புராண, இதிகாசங்களும், நெறிமுறை, கோட்பாடுகளும் தமிழர்களுக்கும் உரியது. ஒரு பண்பாட்டின் இருவேறு பிரிவினர்தான் ஆரியர்களும், திராவிடர்களும் என ஒரு கதை விடுகிறார். அதற்கான சான்றுகள் சிலவற்றை புத்தகத்தின் பின்பக்கத்தில் கொடுத்துள்ளார்.

அவர் எழுதிய அனைத்தும் பொய் என்று நான் கூற மாட்டேன். ஒருவகையில் இந்தியாவிற்கு தென்திசையில் லெமூரியா போன்ற நிலபரப்பு இருந்திருப்பதற்கான வாய்ப்புகள் குறைவே! அவர் காட்டும் ஆதாரங்களிலும் உண்மை இருக்கிறது. ஆனால் அந்த உண்மையின் மீது அவர் கட்டமைக்கும் கற்பனைகள் வரலாறு  தெரியாமல் கற்பனை கதை பேசுவதாய் இருக்கிறது. 

இந்த புத்தகத்தில் இன்னொரு நகைச்சுவை வார்த்தை திரிபு. ஒரு மொழியில் பேசப்படும் வார்த்தையானது காலப்போக்கில் அதே பொருளில், அதே பதத்தில் வேறு வார்த்தையாக மாறிவிடுதல். இது சொல், எழுத்து இரண்டு வகையிலும் மாறக்கூடியது. எனக்கு தெரிந்த சிறிய உதாரணம்: தனஞ்செய ஊர் = தஞ்சாவூர். அனைத்து மொழிகளும் அதன் ஆதி மொழியிலிருந்து இதுபோன்ற திரிபை கொண்டிருக்கும். இதை நிரூபிக்க கூட நம்ப தகுந்த ஆதாரம் வேண்டும் அல்லது இலக்கணம், சொல் பொருள் மூலமாவது நிரூபிக்கப்பட வேண்டும். ஆனால் எழுத்தாளரோ தன் இஷ்டபடி சுமேரியத்தில் சொல்லப்பட்டிருக்கும் வார்த்தைகளை தமிழோடு ஒப்பிட்டு அவரே பல திரிபுகளை (அளந்து விடுகிறார் என்பது தெரியுமளவிற்கு) உருவாகுகிறார். 

அதாவது, சுமேரிய நாகரிகத்தின் முதல் அரசன் என்கி. குமரிக்கண்டத்தின் முதல் அரசன் மாகீர்த்தி. இதை எப்படி ஒப்பிடுகிறார் பாருங்கள்! 

“என் என்ற சொல்லுக்கு சுமேரிய மொழியில் தலைவன் அல்லது பேராற்றல் பொருந்தியவன் என்பது பொருள். மா என்ற தமிழ் சொல்லுக்கும் இதுவே பொருள். எனவே என் (EN) என்கிற சுமேரிய சொல்லுக்கு, மா என்ற தமிழ் சொல்லை இணையாக கூறலாம்.

கி என்ற சுமேரிய சொல்லுக்கு பொதுவாக நிலம் என்பது பொருள். அனால் அது இந்த இஅடத்தில் பொருந்தி வராது. அவ்வாறு பொருள் கொண்டால் சிறந்த இடம் என்றுதான் பொருள் தரும். ஒரு மன்னனின் பெயராக வராது.  எனவே கி என்ற சொல்லை கீர்த்தி என்ற சொல்லின் சுருக்கமாக கொள்ளலாம். 

என் = மா

கி = கீர்த்தி” (பக்கம் 67 – 68)

கட்டுரையின் தொடக்கத்தில் எழுதியிருந்த “சேசோபா” கருத்துக்கு சளைத்தது இல்லை இந்த கருத்து. இதுபோன்ற நிறைய அபத்தங்களை புத்தகம் முழுவது காணக்கிடைக்கின்றன. அதையெல்லாம் எழுதினால் அது தனி புத்தகமாக வரும். இந்த புத்தகத்தின் மூலம் எழுத்தாளர் கட்டமைப்பது இதுதான்:

  1. திராவிடர்கள் யாரும் தமிழ்நாட்டின் பூர்வக்குடிகள் அல்ல.
  2. திராவிடர்களின் லெமூரியா ஒரு கட்டுக்கதை
  3. ஆரியர்களும், திராவிடர்களும் ஒரு இனத்தின் இரு பிரிவுகள்
  4. வேதங்களும், உபநிடதங்களும் ஆரியர், திராவிடர் இருவருக்குமானவை (!$##@*&).

இந்துத்வா அமைப்புகளுக்கும், அவற்றிற்கு மணியடிக்கும் கிழக்கு பதிப்பகத்திற்கும் இந்த புரட்டு கதையை விட நல்ல கதை கிடைக்கவில்லை போல.. 
-யுகன் பிரசாந்த்.

Advertisements