கார்ட்டூன் வரைவதில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி?

   நாம் எல்லாருமே சிறு வயதில் ஓவியம் வரைகிறோம். எல்லா குழந்தைகளின் முதல் ஓவியமே ஒரு வீடும், தென்னை மரமும்தான்! அப்படிதான் நானும் தொடங்கினேன். எனக்கு நினைவு தெரிந்து சிறுவர் மலர் போன்ற புத்தகங்களில் உள்ளவற்றை பார்த்து வரைந்தேன். ஏழாவது, எட்டாவது படிக்கையில் ஆசிரியர் பாடம் எடுக்கும்போது அவரை பார்த்து வரைவது, சினிமா நடிகர்களை வரைவது என்று விளையாட்டாய் போய் கொண்டிருந்தது. எங்கள் ஊரில் மார்த்தாண்டம் ராஜசேகரன் என்ற பிரபலமான ஓவியர் இருந்தார். க்லை இரவு நிகழ்ச்சிகள், கடை பேனர்கள் போன்றவற்றை அவ்வளவு அழகாக வரைவார். அவருடைய ஓவியங்களை பார்த்து அது போலவே வரைய தொடங்கினேன். அவர்தான் எனக்கு முதல் ஈர்ப்பாக இருந்தார்.

படிக்கும் காலத்தில் ஓவிய போட்டிகளில் பங்கெடுத்துக் கொண்டது உண்டா?

        பள்ளியில் எந்த போட்டிக்கும் சென்றது இல்லை. கல்லூரி படிக்கும்போது இரண்டு போட்டிகளில் கலந்து கொண்டேன். ஒன்று கல்லூரிக்குள்ளே நடந்த போட்டி. மற்றொன்று மலையாள சமாஜம் நடத்திய மலையாளிகளுக்கான ஓவியப் போட்டி. நான் மலையாளி கிடையாது. ஓரளவு மலையாளம் பேச தெரியும். நண்பர்கள் உற்சாகப்படுத்தியதால் அந்த போட்டியில் கலந்து கொண்டேன். அது ஒரு சுவாரஸ்யமான கதை. அது ஒரு பென்சில் டிராயிங் போட்டிதான். தலைப்பு போட்டி தொடங்கும்போதுதான் சொல்வார்கள். அவர்கள் சொன்ன தலைப்பு “ஹம்சமும் தமயந்தியும்”.எனக்கு சரியாக புரியவில்லை. ஹம்சம் என்றால் அன்ன பறவை, தமயந்தி என்பது ஒரு பெண் என எனக்கு புரிந்தவாறு ஒரு ஓவியத்தை வரைந்து கொடுத்தேன். என்னுடையதை தவிர மற்றவர்களுடைய ஓவியங்கள் எல்லாம் ஒரே மாதிரியாக இருந்தன. பிறகுதான் தெரிந்தது ஹம்சமும் தமந்தியும் என்பது ரவிவர்மாவின் புகழ்பெற்ற ஓவியத்தின் தலைப்பு. எல்லா ஓவியமும் அவருடையதை நகலெடுத்தது போல இருக்க, மாற்றமாய் இருந்த எனது ஓவியத்திற்கு முதல் பரிசு கிடைத்தது. Out of the box என்று சொல்வார்கள். எனது ஓவியத்தில் எதிர்பாராமல் அது நடந்தது.

கல்லூரியில் கணினி அறிவியல் படித்திருக்கிறீர்கள். பின்னர் ஓவியத் துறைக்கு வந்தது எப்படி?

      12வது முடித்த பிறகு சென்னை கலைக் கல்லூரியில் சேர விரும்பினேன். வீட்டில் யாருக்கும் அது பிடிக்கவில்லை. அவர்கள் விருப்பத்திற்காக கணினி அறிவியல் படித்தேன். படிப்பு முடிந்த பிறகு என்னை சுயமாக முடிவெடுக்க அனுமதித்தார்கள். அப்போது திருவனந்தபுரத்தில் உள்ள Toon animation என்ற நிறுவனத்தில் பயிற்சி பணியில் (Job Training) சேர்ந்தேன். 10 வருடங்கள் அங்கே வேலை செய்து அனிமேசன் துறை பற்றி நிறைய கற்றுக்கொண்டேன்.

விகடனில் வரையத் தொடங்கியது எப்படி?

    சின்ன வயதிலிருந்தே விகடனில் வரும் கார்ட்டூன்கள் பிடிக்கும். கல்லூரி படிக்கும்போது ஒரு வருடம் விகடனில் மாணவ பத்திரிக்கையாளனாக இருந்தேன். சென்னைக்கு வந்து ஸ்டுடியோ ஒன்று தொடங்கியிருந்தேன். அப்போதுதான் சமச்சீர் கல்வி குறித்த கார்ட்டூன் ஒன்றை வரைந்து விகடனுக்கு அனுப்பியிருந்தேன். அது அவர்களுக்கு பிடித்திருந்தது. அதிலிருந்து தொடர்ந்து வரைந்து கொண்டிருக்கிறேன்.

உங்களை பாதித்த ஓவியர், ஓவியம் பற்றி…?

   நல்ல ஓவியங்கள் அனைத்துமே ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதில் முக்கியமானவர்கள் வான்கா, பிக்காசோ. வான்கா மிகவும் அடர்த்தியான வர்ணங்களை பயன்படுத்துபவர். அவருடைய சூரிய காந்தி பூக்கள் ஓவியம் அந்த காலங்களில் மிகவும் புதியது. டாவின்சியும் பிடிக்கும். மார்த்தாண்டம் ராஜசேகரனும் என்னை பாதித்த ஓவியர்களில் முக்கியமானவர்.

ஜோக்குகள், அரசியல் கார்ட்டூன்களில் இதுபோன்ற முப்பரிமாண வகை ரொம்பவே புதிய முயற்சி. இந்த எண்ணம் எப்படி உருவானது? இதற்கு முன் யாராவது இதுபோல் செய்துள்ளார்களா?

    அமெரிக்காவில் நார்மன் ராக்வெல் என்ற ஓவியர் 1940களிலேயே Oil painting முறையில் இதுபோல் செய்திருக்கிறார். முன்னர் விகடனில் அட்டைப்படங்களில் ஜோக்குகள் வரும். அவையும் முழு வண்ணத்தில் வரையப்பட்டவைதான். விகடனுக்கு கலர் கார்ட்டூன் பாணி புதிது அல்ல. ஆனால் அரசியல் கேளிக்கை கார்ட்டூன் பாணியில் இது ரொம்பவே புதிது.

கார்ட்டூன் பாணி தவிர்த்து மற்ற ஓவியங்கள் வரைவது உண்டா?

என்னுடைய விருப்பத்தினால் வீட்டில் வரைந்து வைத்திருக்கிறேன்.

தூரிகையில் வரைவது, டிஜிட்டலில் வரைவது, எது உங்களுக்கு பிடித்திருக்கிறது?

  தொழில்ரீதியாக டிஜிட்டலில் வரைவது எளிதாக இருக்கிறது. வேறு வண்ணம் சேர்த்தல், அழித்தல் சுலபம். மேலும் வர்ண மசிகளை விரயம் செய்ய தேவையில்லை. ஆனால் எனது சொந்த விருப்பத்தின் பேரில் வரையும்போது தூரிகைகளே மனதிற்கு நெருக்கமாக இருக்கின்றன. வண்ண சாயங்களின் மனத்தோடு வரைதல் ரொம்ப பிடிக்கும்.

புத்தக வாசிப்பு பற்றி…

   சிறுகதைகள் பிடிக்கும். எல்லாவற்றையும் விட கட்டுரைகளே மிகவும் பிடித்தது. வரலாற்று கட்டுரைகளை ஆர்வத்தோடு படிப்பேன்.

வருங்காலத்தில் ஓவியம் வரைவது இல்லாமல் போய்விடும் என்கிறார்களே?

    இது பொதுவாக எல்லா காலத்திலும் பேசப்படும் ஒன்றுதான். ஃபிலிம் கேமராக்கள் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் இனி ஓவியம் அழிந்துவிடும் என்ரார்கள். ஃபிலிம் கேமராக்கள் இப்போது இல்லை. ஆனால் ஓவியம் இருக்கிறது.

ஓவியம் கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கு என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?

     முன்னர் போல் ஓவிய பள்ளி சென்று ஓவியம் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இப்போது இல்லை. யூடியூப் போன்ற தளங்களிலேயே எளிதாக வரைய கற்று கொடுக்க நிறைய வீடியோக்கள் கிடைக்கின்றன. இந்த இணைய யுகத்தில் யார் வேண்டுமானாலும் வரைய கற்றுக்கொள்ளலாம். ஆர்வம்தான் முக்கியம்!

ஓவியம் : சசி மாரீஸ்

நேர்காணல்: யூஜென்

Advertisements