பௌன்சர் முதல் பாகம் படித்தபோது எனக்கு பிடிக்கவே இல்லை. மேலும் அதை திட்டி ஒரு பதிவு கூட போட்டேன். ஆனால் இலங்கை நண்பர் ஆஷிக் ஒரு பதிவிட்டு இருந்தார். அது சிந்திக்க வேண்டிய ஒன்றும் கூட!  பௌன்சர் போன்ற Black genre கதைகள் தமிழ் திரைப்படங்களிலேயே வராத இந்த காலகட்டத்திலும் காமிக்ஸை தைரியமாக வெளியிட்டது லயன் காமிக்ஸ் நிறுவனம் என்றார். யோசித்து பார்த்தால் எந்த தைரியத்தில் பௌன்சரை அவர்கள் ஒப்பந்தம் செய்தார்கள் என தெரியவில்லை. மாயாவி, டெக்ஸ் போதும் என்ற மனநிலையில் இருந்த வாசகர்களிடையே பௌன்சரை குறுக்கிட செய்தார். 10%  – 30% விலையில் சலுகை அளித்தும் விற்பனையில் மற்ற காமிக்ஸ்களின் அளவைக்கூட பௌன்சர் தொடமுடியவில்லை. ஆனால் கதைகளத்தில் மற்ற கமர்ஷியல் ரகத்திலிருந்து  விலகி பேசாமல் விட்டுபோன அல்லது கதாநாயக பிம்பத்தால் ஒதுக்கப்பட்ட களத்தினை சொல்வதால் தனி கவனத்துக்கு உரியதாக நான் நினைக்கிறேன்.

                பொதுவாக நாம் அல்லது நான் பார்த்த வன்மேற்கு கௌபாய்கள், மெக்ஸிகன் மீசைகள், செவ்விந்தியர்கள், சலூன், கொள்ளையர்கள், இரும்புகுதிரை, தங்கவேட்டை, உள்நாட்டு போர், டமால்..டுமீல்.. பூம்ம்ம்.. இவ்வளவுக்கும் நடுவில் அவர்கள் வாழ்க்கைமுறை அமைந்திருக்கிறது. வன்மேற்கில் உள்ள குடும்பங்களின் நிலை மிகவும் சிக்கலானதாகவும், வன்முறை நிரம்பியதாகவும் உள்ளது. முக்கியமாக பெண்கள் மிக மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஒரு பூர்வக்குடி இனமே அழிக்கப்பட்டிருக்கிறது. இப்படியானதொரு வன்மேற்கை பெரும்பாலான கதையாசிரியர்கள் தேர்ந்தெடுக்க காரணம் அதில் நிரம்பியுள்ள வன்முறைகளுக்காகவே! டெக்ஸ் வில்லரில் ஆக்சன் கதையாக சொல்லப்பட்ட சம்பவம் பௌன்சரில் வேறு ஒரு கோணத்தில் சித்தரிக்கிறது. பௌன்சர் நாயக பிம்பம் கொண்டதுதான் என்றாலும் மற்ற நாயகர்களில் இருந்து மாறுபட்டு கதாநாயகர்களுக்கான வழக்கமான இலக்கணங்களில் மாறுப்பட்டிருக்கிறான். ஒற்றை கை இழந்தவனாய், பெண்களின் மேல் மோகம் கொண்டவனாய், அதே சமயம் வன்புணர்வை எதிர்ப்பவனாய், எல்லாராலும் நாயிலும் கேவலமாய் பார்க்கப்படுபவனாய் (இவனை போலவே ஒற்றை கால் இழந்த நாய் கூட திரியும்) இருக்கிறான் பௌன்சர். பௌன்சரில் பெண்களின் மீதான வன்கொடுமைகள் நிறைய இடங்களில் சித்தரிக்கப்படுகின்றன. மற்ற கதைகள் பெரும்பாலும் ஆண் கதாபாதிரங்களையும், துப்பாக்கி சண்டை, கொள்ளை, போர் பொன்ற வன்முறைகளை பேசுகின்றன.

                கேரள திரைப்பட விழா சென்றபோது ஜொடரோவ்ஸ்கியின் “Endless Poetry” என்ற திரைப்படம் பார்க்க வாய்த்தது. சர்ரியலிஸ பாணியில் ஒரு அழகான சுய சரித திரைப்படம். அவர் எந்த ஒரு கலையையும் வெறும் கேளிக்கை வடிவமாக மட்டுமே பயன்படுத்தவில்லை. அதற்குள் அவர் உரையாடலை நிகழ்த்தி செல்கிறார். அதற்கு பிறகுதான் பௌன்சரை எடுத்து வாசிக்க தொடங்கினேன். மொத்த 7 பாகங்களையும் ஒரே நாளில் படித்து முடித்தேன். அவர் கதை சொல்லும் முறை நெற்றிபொட்டில் துளைப்பது போல் வெளிப்படையாக இருக்கிறது. டெக்ஸ் போன்ற கதைகளில் வன்முறைகள் குறித்து சொல்லப்பட்டாலும் அது கதாநாயாக பிம்பத்தின் பின்னால் மறைந்துவிடுகிறது. அல்லது கதாநாயகனை மேலும் ஒருபடி தனது ஆதர்ச நாயகனாக வரித்து கொள்ளவே பயன்படுகிறது. சில சமயம் கதாநாயாக பிம்பத்திலிருந்து விலகியிருந்து ஒரு சம்பவத்தை அணுகுவதே அதன் வீரியத்தை புரிவதற்கு உதவும். பௌன்சரை வன்மேற்கின் மற்றுமொரு உண்மைக்கு இணக்கமான படைப்பாக கருதி படித்து பார்த்தால் பிடிக்கும் என்றே நினைக்கிறேன். இல்லையென்றால் புரியாத உலகப்படம் போல உலக காமிக்ஸாக பௌன்சர் இருக்கட்டுமே! ஆனால் எதிர்காலத்தில் இது கண்டிப்பாக விவாதிக்கப்படும் என தோன்றுகிறது..!

  • – யூஜென்
Advertisements