இது சுட்டி டி.வியில் ஆரம்பகாலத்தில் (2007) ஒளிபரப்பான கார்ட்டூன்கள் பற்றிய பதிவு. முதல் பத்தியில் எனது சிறுவயது கார்ட்டூன் அனுபவங்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளேன். அது தேவையில்லை என எண்ணும் நண்பர்கள் இரண்டாவது பத்தியில் இருந்து தொடங்குங்கள்.

                கார்டூன்கள் மேல் எனக்கு எப்போதுமே தீராத ஆசை உண்டு. அது ஒரு மாயாஜால உலகம். ஆனால் எனது பால்யங்களில் (9 வயது வரை) அவ்வளவாக கார்ட்டூன்கள் பார்க்க முடிந்ததில்லை. அதைபற்றி ஏற்கனவே எழுதி உள்ளேன். படிக்க விருப்பம் இருப்பின் கார்ட்டூன் காதலன் – பகுதி 1. என்னுடைய 12வது வயதின்போது 2007ல் சுட்டி டிவி தொடங்கப்பட்டது. அன்றைய நாளுக்கு முதல் நாள் சொந்த ஊரில் திருவிழாவிற்கு சென்றிருந்தோம். அடுத்த நாள் சுட்டி டிவி தொடங்கபோவதாக அறிவித்திருந்தார்கள். எதாவது கார்ட்டூன் சேனல் வருகிறதா என நானும், என் இளைய சகோதரனும் ரிமோட்டை இம்சித்துக் கொண்டிருந்தபோது சுட்டி டிவி திடுமென கண்ணில் பட்டது. அன்று Broadcasting testக்காக வாண்டு என்ற Filler cartoonஐ ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். அப்புறம் பும்பா எனும் Puppet Cartoon! இடையே டோரா, ஜாக்கிஜான், காட்ஸில்லா, ஹீ மேன் போன்றவற்றின் விளம்பரங்கள். வெறுமனே அதையே பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது Cartoon Networkலும் தமிழில் ஒளிபரப்புவார்கள் என்றாலும் சில கார்ட்டூன்கள் மட்டும்தான். ஒரு 24 மணி நேர தமிழ் கார்ட்டூன் சேனல் எங்களை ஈர்த்தது.

                சுட்டியில் ஆரம்ப கால நிகழ்ச்சிகளுக்கு நான் தீவிர ரசிகன் (அதில் சில அரத பழைய தொடர்கள் என்ற போதிலும்). நாள் முழுக்க சுட்டி டிவி பார்ப்பது என்றாலும் அலுக்காது. இப்போது யோசிக்கையில் சுட்டி மற்ற பன்னாட்டு கார்ட்டூன் சேனல்களின் நிகழ்ச்சிகளில் இருந்து மாறுபட்டு இருப்பது புரிகிறது. CN, Disney, Pogo போன்ற சேனல்கள் பெரும்பாலும் தங்களது தயாரிப்புகளான அமெரிக்க கார்ட்டூன்களையும், விதிவிலக்காக சில அனிமே தொடர்களையும் ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள்.ஆனால் சுட்டியின் ஆரம்பகால தொடர்கள் பல நாடுகளிலும் இருந்து பெறப்பட்டவையாக இருந்தது. அவற்றின் கதை சொல்லல், கார்ட்டூன் உத்திகள் ஒவ்வொன்றிலும் வித்தியாசமாக இருந்தன. வாண்டு என்கிற அந்த Filler cartoon ஸ்பானிய கார்ட்டூன் தயாரிப்பு நிறுவனமான Neptuno Films ன் உருவாக்கம் ஆகும். 1991ல் தொடங்கபட்ட இந்நிறுவனம் ஐரோப்பிய கார்ட்டூன் தயாரிப்பு நிறுவனங்களில் முக்கியமான ஒன்றாக இருந்தது. Neptuno Films ன் கார்ட்டூன் தயாரிப்புகள் சிலவற்றை சுட்டி டிவி ஒப்பந்தம் செய்து அந்நாட்களில் ஒளிபரப்பி வந்தார்கள். அவற்றை பற்றி சில வரிகள்…

பன்டலேரோ (Bandalero)

2842

                Director: Joseph Viciana

                Music: Joseph Roig

                எனக்கு ரொம்ப பிடித்த சாகசத் தொடர். அப்போது நான் “ராபின் ஹுட்” படித்திருக்கவில்லை. ராபின் ஹுட்-ன் தழுவல்தான் இந்த பன்டலேரோ கதாபாத்திரம். பன்டலேரோ, அவன் நண்பர்கள் ஜானி (முகமாற்று வித்தைக்காரன்), பருத்திவீரன் (பின்னாளில் “டிராகபுஜ்ஜி” என பெயர் மாற்றினார்கள்), ரோசா மற்றும் அவர்களது வளர்ப்பு நாய்க்குட்டி! பணத்தாசை பிடித்த மேயரும், அவருக்கு சுருதி தட்டும் ஜெனரலும் இணைந்து மக்களிடம் வரியாய் அபகரித்த பணத்தையும், பொருளையும் பன்டலேரோ குழு கொள்ளையடித்து மீண்டும் மக்களிடமே ஒப்படைப்பார்கள். இந்த தொடர் சுட்டியில் மிக பிரபலம். ஸ்பானிய கிராமத்தின் அழகை அதில் உணர முடிந்தது. அதற்கு தகுந்த போல் அறிமுக பாடல் (Theme song) அட்டகாசமாய் இருக்கும்.

மூன்று கரடிகள் (The Three Bears)

hqdefault

                Director: Joseph Viciana

                Music: Joseph Roig

     ஒரு இரவு நேரத்தில் ஒரு மரத்தின் மேல் உள்ள கிழட்டு அணிலும், ஆந்தையும் மூன்று கரடிகளின் கதையை சொல்வதாக கதை தொடங்கும். நமது ஊரில் இரவில் வயதான கிழவிகள் கதை சொல்வது போல இரவும், கிழட்டு அணிலும் இருக்கின்றன. மட்டுமல்லாமல் இது ஒரு குழந்தைகள் கதையை தழுவி உருவாக்கப்பட்ட தொடர். அம்மா கரடி, அப்பா கரடி, கொழுகொழு(பிள்ளை கரடி). கொழுகொழு தோழர்களாக மனித சிறுமி ஒருத்தி (பெயர் நினைவில்லை), ஜாலிக்குட்டி, அழுமூஞ்சி ஆகியோர்! எர்வாமேட்டின் கண்டுபிடிக்காத காலத்தே மொட்டை மண்டையில் முடி வளர்க்க ஆசைப்படும் முட்டாள் விஞ்ஞானி ஒருவன் அந்த காட்டின் பாழடைந்த கோட்டையில் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறான். அவனுக்கு உதவ மூன்று முட்டாள் ஜந்துக்கள். இரண்டு குழுவுக்கும் அவ்வப்போது காட்டுக்குள் நடக்கும் பிரச்சினைகளை குழந்தைகளை கவரும் வண்ணம் மாயாஜாலம், நகைச்சுவை கலந்து உருவாகியிருக்கிறார்கள்.

வாண்டு (Balin)

teaserbox_2457196837

                Creator: Eladio Ballester

                Director: Joseph Viciana

                Music: Joseph Roig

      இது ஒரு 15 அல்லது 20 நொடிகளே உருவாக்கப்பட்ட Filler Cartoon. ஆனால் ஒரு பாதாளத்திற்குள் இருந்து கொண்டு அந்த எலி செய்யும் சேட்டைகள் செம ரகளை! பார்க்க விரும்புவோருக்கு குட்டி சாம்பிள் இதோ Balin Rat Cartoon

WORLD AHOY!

hqdefault-2

         இதை வின்சென்ட் மொசோனிஸ் என்பவர் உருவாக்கினார். Neptuno Films விநியோக உரிமத்தை பெற்று வெளியிட்டார்கள்.வரலாறு, அறிவியல், அறிஞர்கள் போன்ற பொது அறிவு தொடர்பாக 40 கார்ட்டூன்களை 5 நிமிட தொடராக உருவாகினார் வின்சென்ட். இதுவும் சுட்டி டிவியில் Fillerஆக பயன்படுத்தப்பட்டது. இது Cut Out Animation என்ற வகையில் உருவாக்கப்பட்டது. அதாவது நமது ஊர் தோல்பாவைக்கூத்து போல! வரலாற்று நிகழ்வுகள் பற்றிய ஒரு கார்ட்டூனை பண்டையகால கூத்து முறையில் உருவாக்கியிருப்பது கவனிக்க வேண்டிய சிறப்பம்சம். நான் முதன்முதலில் வைகிங், வால்ஹாலா போன்றவற்றை பற்றி தெரிந்து கொண்டது இத்தொடரின் மூலமாகதான். பார்க்க விரும்புவோருக்கு World Ahoy – The Vikings

            மேற்கூறியவை மட்டுமில்லாமல் கடல் இளவரசிகள் (Sea Princesses) என்ற தொடர் சுட்டியில் ஒளிபரப்பான Neptuno Filmsன் தயாரிப்புதான். ஆனால் அதை நான் பார்த்த்தில்லை என்பதால் அது குறித்து எழுதவில்லை. இவற்றில் பல தொடர்களுக்கு இசை ஜோசப் ரொய்க் என்பவர்தான். மூன்று தொடர்களின் அறிமுக பாடலகளும் தமிழிலேயே உருவாக்கப்பட்டது போல நன்றாக இருக்கும். இசைக்கேற்றபடி தமிழில் வரிகள் எழுதியவரையும், கதாபாத்திரங்களுக்கு தமிழ் பெயர் கொடுத்தவரையும் பாராட்ட வேண்டும். மேலும் பல கார்ட்டூன் தொடர்களை பற்றியும் எழுத ஆர்வமாய் உள்ளது. இப்போதைக்கு இதுவரை போதும் என்றே நினைக்கிறேன். நன்றி!!!

Advertisements