கார்ட்டூன்களை பற்றி எழுத வெகுநாளாய் எண்ணம் இருந்து வருகிறது. எதில் தொடங்குவது? எப்படி தொடங்குவது என யோசிக்கையில் கார்ட்டூன்களுக்கும், எனக்குமான பால்ய கால நினைவுகளில் தொடங்கலாம் என்பது சரியாகப்பட்டது. நான் விரும்பி பார்த்த பல கார்ட்டூன்களோடு அந்த கால சூழலும், நினைவுகளும் கூடவே நினைவில் நிற்கின்றன. கிட்டதட்ட இது ஒரு சிறுவனின் கார்ட்டூன் காதலின் கதை என வைத்துக்கொள்ளுங்களேன்.

          நான் சிறு பிள்ளையாய் இருக்கையில் வீட்டில் Onida Black&White TVதான் இருந்தது. எங்கள் தெருவிலேயே அப்போது எனது வீட்டோடு சேர்த்து 3 வீடுகளில்தான் டி.வி இருந்தது. அதுவும் 52 சேனல்கள் தெளிவாக எடுக்கும் இந்த கால டி.விக்கள் போல கிடையாது. அதற்கு ரிமோட் கிடையாது. சேனல் மாற்றுவதற்கான பொத்தானை திருகும்போது “பட், பட்” டென சத்தம் போடும். அப்போது (6வயது) அந்த பொத்தானை திருகும் பலம் கூட எனக்கு கிடையாது. அதில் மொத்தமாய் 5 முதல் 7 சேனல்கள் வரைதான் எடுக்கும். அதிலும் கார்ட்டூன் சேனல் ஒன்றுகூட கிடையாது.

               கார்ட்டூன்கள் பார்ப்பதே சொற்பமான அந்த வயதில் எனக்கு பார்க்க கிடைத்ததெல்லாம் சக்திமான், ஜீ பூம் பா, மாயா மச்சீந்திரா போன்ற உள்ளூர் சூப்பர் ஹீரோக்கள் தொடர்கள்தான். அவைகளையும் பிடிக்கும் என்றாலும் கார்ட்டூன்கள் பார்க்க முடியாத வருத்தம் இருக்கத்தான் செய்தது. நான் நினைத்துக் கொண்டேன் கார்ட்டூன்கள் நம் ஊரில் கிடையாது வெளிநாட்டில் மட்டும்தான் அந்த சேனல்கள் எடுக்கும்போல..! அந்த சமயத்தில்தான் சன் டி.வியில் “கிட்ஸ் ஜங்ஷன்” என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி. தினமும் மாலை நேரத்தில் சில கார்ட்டூன்கள் ஒளிபரப்ப ஆரம்பித்திருந்தார்கள். எனக்கு நினைவிருக்கும் வரை முதலாவதாக பார்த்த கார்ட்டூன் Popey-The Sailor Man, Casper என்றாலும் எதில் பார்த்தேன் என நினைவில் இல்லை. கிட்ஸ் ஜங்ஷனில் முதலாவதாக பார்த்த கார்ட்டூன் தொடர் “Mummies Alive” (சில வருடங்களுக்கு முன்பு வசந்த் தொலைக்காட்சியில் கூட ஓடிக்கொண்டிருந்தது). பிரம்மிடிலிருந்து வரும் நான்கு மம்மிக்கள் ஒரு சிறுவனை காப்பாற்ற செய்யும் சாகசங்கள் என்பது வரை நினைவிருக்கிறது. தொடர்ந்து பின்னாட்களில் “Magic School Bus, Denver-the dionosaur” போன்ற தொடர்களும் ஒளிபரப்பாயின.(பிறகு சிலகாலம் கழித்து இதேப்போல் குட்டீஸ் டைம்ஸ் என ஆரம்பித்து Powerpuff Girls, Superman, Batman போன்ற தொடர்களை ஒளிபரப்பினார்கள்.) ஆனால் என் போதாத காலம் இடைப்பட்ட காலத்தில் எங்கள் வீட்டில் கேபிள் இணைப்பு இல்லை. பிறகு ஒருவழியாக கம்பிகட்டி கனெக்சன் எடுத்தல் முறையில் சில காலம் டி.வி ஓடிக்கொண்டிருந்தது. லோக்கல் சேனல்கள் புதிதாய் வரத் தொடங்கிய காலமது. பெரும்பாலும் புதுப்பட பாடல்கள், இரவு 9 மணிக்கு மேல் புதுப்படங்கள் போய்க்கொண்டிருக்கும். அப்போது புதுப்படங்களை தியேட்டரில் பார்த்ததில்லை. கூட்டமாக கலர் டி.வி வைத்திருப்பவர்கள் வீட்டில் பார்ப்போம். நிறைய படங்கள் பார்க்க ஆரம்பித்தது அப்போதுதான். ஒருமுறை லோக்கல் சேனலில் ஒரு பூனையும், எலியும் அட்டகாசம் செய்யும் கார்ட்டூன் ஒன்று பார்த்தேன். பிறகுதான் அதன் பெயர் Tom & Jerry என தெரிந்தது. பிறகு Gift box, Sticker, Play Card என கிடைக்கும் பொருள்களில் உள்ள கார்டூன்களையெல்லாம் வரைய தொடங்கினேன். சுமாராய் இருக்கும் அதை பார்த்து என் நண்பர்கள் வாய் பிளந்தபோது உள்ளுக்குள் ஒரு சிலிர்ப்பு. அதுமுதல் நிறைய கார்ட்டூன்கள் நோட்டு போட்டு வரைய ஆரம்பித்தேன்.

                இப்படியே நாட்கள் கடந்தன. வீடுகள் முழுக்க கலர் டி.வி களமிறங்கிவிட்ட காலம். எங்கள் வீட்டிலோ அதே B&W டி.வி!! ஒருநாள் சேனல் மாற்றும் திருகியை திருகிக் கொண்டிருந்தபோது இரண்டு சேனல்களுக்கிடையே திடீரென்று ஒரு கார்ட்டூன் உருவம் தெரிந்து மறைந்தது. கார்ட்டூன் பேப்பர் கிடந்தாலே விடமாட்டோம், சேனல்னா.. சொல்லவா வேண்டும். ஆர்வத்துடன் அரைமணி நேரம் (ஒரு Flowக்கு எழுதுனேன். அரை மணி நேரத்திற்கு மேலயே ஆனது) போராடி ஓரளவு தெளிவாய் தெரியும் அந்த சேனலை பார்த்தேன். Cartoon Network!! வெற்றிகரமாய் வீட்டில் கார்ட்டூன் சேனல் எடுக்கும்போது 9ம் வகுப்பு வரை வந்துவிடேன். ஒவ்வொரு நாளும் CN எடுப்பதற்கு அரை மணி நேரத்திற்கு மேல் டி.வியை சரிசெய்ய வேண்டியிருந்தது. அப்போதுதான் CNல் BEN10 போட ஆரம்பித்திருந்தார்கள். அப்போது அது அவ்வளவு பிரபலம் கிடையாது. நான் விரும்பியதெல்லாம் Tom&Jerry, Scooby-Doo, Popey-The Sailor man போன்ற தொடர்களைதான். ஆனால் Ben10காகவே CN பார்க்கும் நிலைமையும் வந்தது.

               ஒரு இடைசெருகல். நான் எட்டாம் வகுப்பு படிக்கையில் JETIX சேனல் POWER RANGERS பிரபலமான காலகட்டம். ஆனால் பலர் வீட்டு டி.விகளில் JETIX எடுக்காது. JETIX பார்க்கும் சில பசங்களும் தானே பவர் ரேஞ்சர்ஸை கண்டுபிடித்தது போல் சீன் போடுவான்கள். பவர் ரேங்சர்ஸ் போலவே CNலும் GRANDSAZERS என தொடர் போடுவதாக நண்பன் மூலம் தெரிந்தது. அவன் வீடு தூரம், சைக்கிளில் போவதே சிரமம். அப்போது என் மாமாவிற்கு மணமாகி சில மாதங்கள் ஆகியிருந்தது. அவர்கள் வீட்டில் கலர் டி.வி உண்டு. 1கி.மீ தூரம் செல்ல வேண்டியிருக்கும். GRANDSAZERS பார்ப்பதற்காகவே நானும், அண்ணனும் சைக்கிள் எடுத்து கொண்டு மாமா வீட்டிற்கு செல்வோம். GRANDSAZERS எங்கள் பள்ளியில் பிரபலமானது. விளையாட்டு நேரங்களில் கிரான்ட்சேஸர்ஸத்தான் விருப்பமான விளையாட்டு. அது முடிந்து ஜஸ்டிரைஸர்ஸ் (JUSTIRIZERS), அதுவும் போனது, சேஸர் எக்ஸ் (Sazer X) வந்தது. அதற்கு மேல் எங்களுக்கு அதன் மீதான ஆர்வம் போய்விட்டது. கடைசியாக வந்த சேஸர் எக்ஸ் முந்தைய தொடர்களை போல் ஈர்க்கவில்லை. இவை மூன்றுமே கொரிய சாகச தொடர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இடைசெறுகல் முடிந்தது.

                     சேஸர் எக்ஸ் முடிந்ததோடு நானும் எனது 8ம் வகுப்பை முடித்து 9ம் வகுப்பிற்கு வேறு பள்ளிக்கு சென்றேன்.அப்போதுதான் டப்பா டி.வியில் கார்டூன் சேனல் எடுக்கவத்தது, பென்10 முதலிய தொடர்களை பார்த்தது. அந்த பள்ளியில் கிரான்ட் சேஸர்ஸ் போல் இங்கே பென்10. தினமும் அதை பார்த்துவிட்டு வந்து கதை பேசுவதே எங்களது முக்கிய வேலை. படிப்பதெல்லாம் அடுத்த கட்டம் (எந்த காலத்துல படிச்சிருக்கோம்). அந்த பள்ளி போல இங்கே விளையாட தனி நேரம் ஒதுக்கப்படுவது கிடையாது. கதை பேசிதான் பொழுதுபோனது. அத்தனையும் கார்டூன், ஹாலிவுட் கதைகள். அவற்றை பார்க்க முடியாத பயல்கள் கதை கேட்க ஆர்வமாக வருவான்கள். அவன்களிடம் சொந்த கற்பனையும் சேர்த்து அளந்துவிடுவது(அவன்களுக்கு தெரியவா போகிறது). இப்படியாக பொழுதை கழித்த தருணத்தில்…

காதல் கதை தொடரும்…

Advertisements