எல்லா நாட்டின் வாழ்க்கை முறையிலுமே “பேய் கதைகள்” முக்கியமான இடத்தை பெற்றவை. முக்கியமாக தமிழ்நாட்டில் இரவில் பாட்டி மடியில் அமர்ந்து பயந்துகொண்டே பேய் கதைகள் கேட்கும் குழந்தைகள் ஏராளம். நான் சிறுவனாக இருந்த காலத்தில் எனது அம்மாச்சி எனக்கு பேய் கதைகள் சொல்லி பயமுறுத்தி தூங்க வைக்க முயற்சிப்பாள். அந்த கதையை கேட்டபிறகு எனக்கு பயத்தில் தூக்கமே வராமல் அம்மாச்சியை இறுக அணைத்துக்கொண்டு கண்களை மூடி படுத்திருப்பேன். இந்த சம்பவம் பெரும்பாலான தமிழர்களின் பால்யங்களின் ஒரு பகுதியாக இருப்பதுண்டு. மேற்கு நாடுகளின் பேய் கதைகளுக்கும், நம்முடைய பாட்டி சொல்லும் பேய் கதைகளுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. பெரும்பாலும் அவர்கள் சொல்லும் பேய்களான Dragula, Monster, Warewolf, Frankenstein, Vampire போன்றவை யாரோ எப்போதோ சொன்ன கதைகளாகவோ, புத்தக எழுத்தாளர்களின் புனைவாகவோ இருக்கின்றன. ஆனால் நம் பாட்டி சொல்லும் கொள்ளிவாய் பிசாசு, மினி பேய், மோகினி பேய், ரத்தங்கொள்ளி பிசாசு, குழந்தைதின்னி பேய் போன்றவை அவர்களுடைய நிஜ வாழ்வில் ஏற்பட்ட சில சம்பவங்களோடு கற்பனையாக பிண்ணப்பட்டவை. அது அவர்கள் கதையை அவ்வளவு தத்ரூபமாக சொல்வதில் தெரியும். மேலும் தங்களையும் கூட அதில் ஒரு பாத்திரமாக இணைத்தும் கதையை சொல்வார்கள். இந்த பேய்களின் பெயரை கேட்டாலே சற்று உதறல் எடுக்கும்தானே! ஆனால் இப்போது தமிழ் பேய்களும் கூட கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றன. பேய் கதை சொல்ல இப்போது அப்பத்தாக்களும், அம்மாச்சிகளும், அப்பாயியும் குழந்தைகள் பக்கத்தில் இல்லை. இந்த பேய்கள் பற்றிய எந்தவொரு பதிவும் எந்த புத்தகத்திலும் இல்லை (பேய் என்கிற மூடநம்பிக்கை வளரவேண்டுமா என நினைத்திருப்பார்கள் போல). பேராசிரியர் எ.சோதி போன்ற சிலர் எழுதிய பேய் கதைகளே இப்போது சிறுவர்களுக்கு சொல்ல இருக்கின்றன. ஆனால் மேற்கு நாட்டு பேய்கள் லாவகமாக காமிக்ஸ், கார்ட்டூன், திரைப்படம் என எல்லாவற்றிலும் புகுந்து கொண்டு விட்டன. அப்படிப்பட்ட ஒரு பேய் கார்டூன் தொடர்தான் Courage The cowardly dog show. (பேய் வருவது நாய்க்கு தெரியும்னு நம்ம ஊருல சொல்லுவாங்கல்ல.. அந்த கான்செப்ட்தான்..)

season_1

              ஒரு நாள் இரவில் எகிப்தில் உள்ள புராதானமான ராம்ஸீயின் கல்லறையில் உள்ள கல்வெட்டு ஒன்றை இரு திருடர்கள் திருடிக் கொண்டு செல்கின்றனர். போலீஸ் ஹெலிகாப்டெரில் அவர்களை துரத்திக்கொண்டு வருகின்றனர். அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக அந்த புராதான கல்வெட்டை ஓரிடத்தில் புதைத்துவிட்டு கிளம்பும் நேரத்தில் ராம்ஸீயின் புதைக்கப்பட்ட சடலம் மம்மி வடிவில் அவர்கள் முன் தோன்றி கல்வெட்டை திரும்ப கொடுக்குமாறு கேட்கிறது. அவர்கள் மறுத்துவிடவே ராம்ஸீயின் சாபத்தின் விளைவாக அழிந்து போகின்றனர். அந்த கல்வெட்டு புதைக்கப்பட்ட இடம் வயதான தம்பதியினர் மியூரியல் மற்றும் யூஸ்டெஸ் வாழும் வீட்டிம் முன் பகுதி. அந்த தம்பதியினர் ஊரைவிட்டு விலகி தனியாக ஒரு அத்துவான வனப்பகுதியில் தனியாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு ஒரே துணை, கரேஜ்(courage)(பொருள்: வீரம், நம்பிக்கை) என்னும் அவர்களது பிங்க் நிற நாய்க்குட்டிதான்! (பெயரளவில் மட்டுமே வீரன்) கரேஜ் பள்ளத்தைத் தோண்டும்போது ராம்ஸீயின் கல்வெட்டு கிடைக்கிறது. அதை எடுத்து சென்று யூஸ்டெஸிடம் கொடுக்கிறது. யூஸ்டெஸ் சுயநலம் பிடித்தவன், பணத்தாசைக்காரன். அந்த கல்வெட்டு மில்லியன் டாலர் பெறுமானமுள்ளது எனத் தெரிந்தவுடன் அதை பணமாக்க முற்படுகிறான். அந்த கல்லினால் ஏற்படும் ஆபத்தை உணர்ந்த கரேஜ் அதை தூக்கியெறிய சொல்லி குறிப்பால் உணர்த்துகிறது(கரேஜால் மனிதர்களிடம் பேசமுடியாது). அதை யூஸ்டெஸ் கண்டுகொள்ளவில்லை. அன்றிரவு ராம்ஸீயின் ஆவி யூஸ்டெஸின் வீட்டின்முன் தோன்றுகிறது. கல்வெட்டை திரும்ப கேட்கிறது. யூஸ்டெஸ் பேரம் பேசவே ராம்ஸீ அவர்கள் மேல் மூன்று சாபங்களை ஏவுகிறது. இந்த சாபங்களிலிருந்து கரேஜ் மியூரியலையும், யூஸ்டெஸ்ஸையும் எப்படி காப்பாற்றியது? கல்வெட்டு முடிவில் என்ன ஆனது? என்பதை விருவிருப்பாகவும், அமானுஷ்யம் கலந்ததாகவும் உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ஜான்.ஆர்.டில்வொர்த்,கதையாசிரியர் பில் மார்சிலி. Courage the cowardly Dog என்னும் பிரபலமான கார்டூன் தொடரில் வெளியான ஒரு கதை இது. எத்தனையோ அமானுஷ்ய கார்டூன் தொடர்கள் வெளிவந்தாலும் கரேஜ் அவற்றில் வித்தியாசமானது. Courage the cowardly dog: King Ramse’s curse என்ற இந்த தொடரை என் சிறு வயதில் பார்த்தபோது மிகவும் பயந்தேன் (இப்போதும் கூட லைட்டா).

                    கரேஜ் தொடர்கள் அனைத்தும் அமானுஷ்யத்தை நகைச்சுவை கலந்த பயவுணர்வுடன் சொல்லக்கூடியவை. மொத்தமாக 56க்கும் மேல் வெளியான இந்த தொடர் பேய்கள், விண்வெளி ஜந்துக்கள், முட்டாள் விஞ்ஞானி,ஸோம்பிகள் போன்ற அம்மனுஷ்யம் நிறைந்த கதையமைப்பை கொண்டவை. கரேஜ் கதையின் தனித்துவம் ஒவ்வொரு கதையிலும் வரும் புதிய புதிய வில்லன்களை தவிர கதைகளம் கரேஜ்,யூஸ்டெஸ்,மியூரியல் இந்த மூன்று பிரதான பாத்திரங்களை சுற்றியே பின்னப்பட்டிருக்கும். அமைதியான காடு, தன்னந்தனியே ஒரு வீடு, அதில் வாழும் வயதான ஜோடிகள், அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள், அதிலிருந்து அவர்களை காக்கும் கரேஜ் என்னும் நாய்க்குட்டி இதுதான் கதையின் கரு. ஆனாலும் கதை சொல்லும் விதத்தில் அசத்தியிருக்கிறார்கள். பிண்ணனி இசையும், அமானுஷ்ய சத்தங்களும் புது ரகம். தொடரின் துவக்கப்பாடலே கர கரவென ஒளித்துக்கொண்டிருக்கும் டிவியில் கரேஜ் மற்றும் குடும்பத்தினரின் அறிமுகம், கதைகளம் பற்றிய சுருக்கத்தை தொகுப்பாளர் ஒருவர் கூறுவதாக இருக்கும். பிரதானமாக இசையை தாண்டி விசித்திரமான சத்தங்கள் இசையாக பயன்படுத்தப்பட்டிருக்கும். ராம்ஸீயின் இரண்டாவது சாபத்தின் போது ஒலிக்கும் “ராம்ஸீஸீஸீஸீஸீஸீ……..” என்ற பாடல் சில நொடிகள் ஆனாலும் மயக்கிவிடும் ரகம். அடுத்ததாக கரேஜ். குண்டான உடலமைப்பு ஒல்லியான கை, கால்கள் (நம்புங்க கரேஜுக்கு கை உண்டு). ஆபத்துகளை கண்டு பயந்து அலறும்போதும், தம்பதிகளை காப்பாற்ற பயத்தைத் தாண்டி செயல்படும்போதும் மனதில் நெருக்கமானதொரு இடத்தை பிடித்துவிடுகின்றது. அதனுடைய சின்ன சின்ன அசைவுகளும் அவ்வளவு அழகாக (cute) இருக்கும்.

                         இந்த தொடரை உருவாக்கிய ஜான்.ஆர்.டில்வொர்த் நியூ யார்க் VISUAL ARTS பல்கலைகழகத்தில் பயின்றவர். பிறகு சில தொடர்களுக்கு கலை இயக்குனராக பணிபுரிந்தார். 1991ல் தனியாக ஒரு அனிமேஷன் கம்பேனியை துவங்கினார். அவர் உருவாக்கிய முதல் ஏழு நிமிட குறுங்கதைதான் Courage the cowardly dog: The chicken from outer space.  டாம் அண்ட் ஜெர்ரியை உருவாக்கிய படைப்பாளியான ஜோசஃப் பார்பராவின் உதவியுடன் 1996ல் Cartoon Network’s World Premiere Toons ல் தேர்ந்தெடுக்கப்பட்டு Cartoon Network சேனலில் ( johny bravo, dexter’s laboratory முதலிய தொடர்களும்..) ஒளிபரப்பப்பட்டது. மேலும் 68வது ஆஸ்கர் விருது விழாவில் Best Animated Short Film என்ற வகைமையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலிலும்(Nominated List) இடம்பெற்றது. 2000ம் ஆண்டில் தொலைக்காட்சி கார்டூன்களில் சிறந்த முயற்சிக்கான Annie Awardsஐ ஜான்.ஆர்.டில்வொர்த் (A Night at the Katz Motel தொடருக்காக) பெற்றார். 2001ல் Best Sound Editing — Television Animated Series என்ற வகையில் சிறந்த கார்டூனுக்கான Golden Reel Awardsம் பெற்றது. Comedy horror ல் பிரபலமடைந்த Courage the cowardly dog 1996 முதல் நான்கு சீசன்களாக (சீசனுக்கு 13 தொடர்) 2002 வரை வெளிவந்தது. 2014ல் ஸ்பெஷல் தொடர் ஒன்றும் வெளியிடப்பட்டது. இன்று வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டும் இருக்கிறது. Cartoon Network சேனலில் கூட இரவு நேரங்களிலும், பொழுது விடியும் அதிகாலை நேரங்களிலுமே இதை ஒளிபரப்புகிறார்கள். இந்த தொடரை பார்க்கும் நேரமெல்லாம் இதுபோல் நம் வட்டாரத்தில் உலவிக்கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான பேய்களையும் அவற்றின் ஆயிரக்கணக்கான கதைகளையும் கார்ட்டூன்களாக உலவ விட வேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறது. யாராவது கொள்ளிவாய் பிசாசு எப்படி இருக்கும்னு பாத்திருக்கீங்களா??? (மீத்தேன் அது இதுன்னு அறிவியல் விளக்கமெல்லாம் சொல்லக்கூடாது… ஹி..ஹி..ஹி…)

-Yugenprasanth

Advertisements