காமிக்ஸுக்கென ஒவ்வொரு நாட்டிலும் தனி வரலாறே உண்டு. அமெரிக்காவின் காமிக்ஸ் வரலாறு பெரும்பாலும் சூப்பர் ஹீரோக்கள் எனப்படும் அதிசய சக்தி படைத்த மனிதர்களால் உருவாக்கப்பட்டது. அமெரிக்காவில் காமிக்ஸ் சித்திரக்கதை உருவாகும் முன்னே ஐரோப்பாவில் பிரபலமாக இருந்தது.1842ல் அப்படியாக ஐரோப்பாவில் பிரபலமான  Rodolphe Töpffer உருவாக்கிய The Obadiah oldbuck என்ற காமிக்ஸ்தான் அமெரிக்காவின் முதல் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட காமிக்ஸ். பிறகு 1849ல் ஜேம்ஸ் மற்றும் ரொனால்ட் உருவாக்கிய Journey to the Gold Diggins by Jeremiah Saddlebags என்னும் சித்திரக்கதையே அமெரிக்காவின் முதல் காமிக்ஸ். அது காமிக்ஸ்களின் துவக்க காலம் என்பதால் மிகப்பெரும் வரவேற்பு இல்லை. பின்நாட்களில் ஜோசப் புலிட்சர்(இவர் பெயாரால்தான் புலிட்சர் விருதுகள் வழங்கப்படுகின்றன.) நடத்தி வந்த தி நியூயார்க் வோர்ல்ட் (The Newyork World) என்ற பத்திரிக்கையில் வெளிவந்த yellow kid என்ற தினசரி கார்ட்டூன் தொடர் மக்களிடையே முகவும் பிரபலம் ஆனது.(Yellow Kid பற்றி தனியே ஒரு கட்டுரையே எழுதலாம்). தி நியூயார்க் வோர்ல்ட் போலவே அமெரிக்காவில் மற்றொரு பிரபலமான பத்திரிக்கை தி நியூயார்க் ஜார்னல்(The Newyork Journal) 1898க்கு பிறகு Yellow Kid ன் உரிமத்தை அதன் கர்த்தாவான Richard F. Outcault என்பவரிடமிருந்து பெற்று வெளியிடத் தொடங்கினார்கள். இந்த Yellow Kidதான்  பின்னாளில் பத்திரிக்கைத் துறையில் Yellow Journalism எனும் வகைமாதிரி உருவாக காரணமாக அமைந்தது. Yellow Kidற்கு மக்களிடையே கிடைத்த பரவலான வரவேற்பிற்கு பிறகு பலவகையான காமிக்ஸ் தொடர்கள் செய்தித்தாளில் வலம் வரத் தொடங்கின. அமெரிக்காவில் காமிக்ஸ்களின் தொடக்க காலகட்டம் இதுவே!

                1930களில் காமிக்ஸ் உருவாக்கம் மிகப்பெரும் மாற்றத்தைக் கண்டது. அதுவரை தினசரிகளில் தொடர்கதையாக(தினதந்தி கன்னித் தீவு போல) வெளிவந்த காமிக்ஸ் தொடர்கள் புத்தகமாக மறுபதிப்பு செய்யப்பட்டன. அதிக பிரபலமான சூப்பர்மேன் தொடர் இதுமுதல் தொடங்கியது. இரண்டாம் உலக யுத்த காலகட்டங்களில் சூப்பர் ஹீரோக்களின் கதைகள் மிக பிரபலமடைந்தன. பல நிறுவனங்கள் புதிதாய் தோன்றி பலவகையான சூப்பர் ஹீரோக்களை களமிறக்கினர். போட்டிகள் அதிகமாகவே, சூப்பர் ஹீரோக்கள் டல்லடிக்கவே காமிக்ஸ் பாதை வன்மேற்கு(Wild West), அறிவியல் புனைவு என திசைமாறியது(சூப்பர் ஹீரோக்களுக்கு போதாத காலம்). 1950களில் தொலைக்காட்சி அமெரிக்காவில் பிரபலமடைய தொடங்கிய காலம் காமிக்ஸ் நிறுவனங்கள் பெரும் வீழ்ச்சியை சந்தித்தன. பல நிறுவனங்கள் திவாலாகி போயின. சிறுநிறுவன முதலாளிகள் தங்கள் நிறுவங்களின் உரிமத்தை பெருநிறுவனங்களுக்கு விற்றுவிட்டனர். இந்த காலகட்டம்தான் சூப்பர் ஹீரோக்களின் மறுஉதயம் துவங்கியது. 50களின் துவக்கத்தில் இருந்து காமிக்ஸில் பல வகையான வகைமாதிரிகளை மக்கள் ஏற்றுக் கொள்ள துவங்கினர். ஆனாலும் தன் பால்ய காலத்து சூப்பர் ஹீரோக்களையும் விட்டுக்கொடுக்கவில்லை. பெரும்நிறுவனங்கள் திறமையான கதாசிரியர்களையும், ஓவியர்களையும் கொண்டு சூப்பர் ஹீரோக்களை உயிர்பித்தார்கள். ஒவ்வொரு அமெரிக்க சிறுவனும் தனது ஆதர்ச சூப்பர் ஹீரோவின் காமிகஸ்களோடு வலம்வரத் தொடங்கிய நாட்கள் அவை.

                காமிக்ஸ் ஆராய்ச்சியாளர்கள் அமெரிக்க காமிக்ஸ் வரலாற்றை Golden age, Silver age, Platinum age, Bronze age என பலவகையாக பிரிக்கிறார்கள். அதன்படி 1938(சூப்பர்மேன் தொடர்களின் துவக்க காலம்) முதல் 1954வரை பொற்காலம்(Golden age) எனப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில்தான் காமிக்ஸுக்கான கட்டமைப்பு (பேனலில் வரைவது, பலூன்களில் வசனங்களை புகுத்துவது) வரையறுக்கப்பட்டன.இந்த காலகட்டத்தில்தான் அமெரிக்காவின் பிரபலமான DC Comics(1934),Marvel(1939),EC Comics போன்ற நிறுவனங்கள் காமிக்ஸ் உருவாக்கத்தில் ஈடுபடத்துவங்கின. 1956முதல் 1970 வரையிலான காலகட்டம் வெள்ளி காலம்(Silver age) என்றும், 1970 முதல் 1986 வரை வெண்கல காலம்(Bronze age), 1986 முதல் தற்போதைய காலம் வரை தொடர்வது நவீன காலம்(Modern age) எனவும் வகைப்படுத்தப்படுகிறது. ஆனால் ஒரு சாரார் இந்த கருத்தை ஏற்க மறுக்கின்றனர். 1828 முதற்கொண்டு அமெரிக்காவில் காமிக்ஸ் படைப்பு மற்றும் வளர்ச்சி தொடங்கிவிட்டதால் வரலாறு மேற்சொன்ன ஐந்து வகையாக அல்லாமல் ஒன்பது வகையாக அவர்கள் பிரிக்கிறார்கள். ஆனாலும் பெரும்பான்மையினர் ஏற்றுக்கொள்வது காமிக்ஸின் ஐந்துகால கருத்தைதான். மேற்சொன்ன ஐந்து காலவரிசையில் காமிக்ஸ்களின் உருவாக்கம் மற்றும் வளர்ச்சி பற்றி மிகப் பெரும் புத்தகமே எழுதலாம்.

Source : Wikipedia

-Yugenprasanth

Advertisements