நான் படித்ததிலேயே மிகவும் பிடித்த காமிக்ஸ் புத்தகம் ஒன்றை பற்றி எழுத போகிறேன்.அதற்கு முன்பு காமிக்ஸ் பற்றி சிறிய குறிப்பை பார்ப்போம்.எனக்கு காமிக்ஸ் படிப்பதில் அலாதியான பிரியம் உண்டு.நான் முதல்முதலாய் ஒரளவு பெரிய காமிக்ஸ் படித்தேனென்றால் ஆறாவது படிக்கையில் படித்த ‘அமானுஷ்ய அலைவரிசை’ என்ற கதைதான்.பிறகு இதுநாள் வரை அதற்கான வாய்ப்பு கிடைக்காமல் போயிற்று.சமீபத்தில் ஒரு புத்தகக் கடையில் காமிக்ஸை பார்த்ததும் ஆர்வமாக வாங்கத் தொடங்கினேன்.பொதுவாகவே, காமிக்ஸ் குழந்தைகள்தான் படிக்கவேண்டும் என்பதான எழுதப்படாத விதி ஒன்று தமிழகத்தில் இருக்கிறது.பொதுவாக, எல்லாருடைய எண்ணங்களும் என்னவெனில் காமிக்ஸ் குழந்தைகளை ஈர்க்கும்படியான கதை,கதாப்பாத்திரங்கள் கொண்ட புத்தகம்.உண்மைதான் மறுப்பதற்கில்லை. ஆனால் அதையும் தாண்டி இன்று காமிக்ஸின் முன்னேற்றம் உலகத் திரைப்படங்களையும்,புகழ் பெற்ற நாவல்களையும் ஒத்த தரமுடையதாய் உருவாகி உலகம் முழுவதும் உள்ள சிறுசு முதல் பெருசு  வரை சகலரையும் தன்னுள் உள்வாங்கிக்கொண்டிருக்கிறது. இன்று உலகளவில் வெற்றி பெற்ற ஹாலிவுட் படங்களான IRON MAN, BAT MAN, SUPER MAN, SPIDERMAN, X-MAN போன்ற manகள், பிரிட்டனின் ஹீரோவாய் உருவாகி ஹாலிவுட்டுக்கு புலம்பெயர்ந்த ஜேம்ஸ்பாண்ட் 007 மற்றும் 2010ம் வருடத்தின் மிகப்பெரிய வசூல் சாதனை என்று பெயர்பெற்ற AVENGERS அனைவருமே காமிக்ஸிலிருந்து உருவானவர்கள்தான்.இது சிறு உதாரணம் மட்டுமே!

   சாகஸ நாயகர்களை மட்டும் அல்ல சாமனிய வாழ்க்கையையும், வரலாற்றையும் கூட காமிக்ஸ்கள் பதிந்திருக்கின்றன. சிக்கலான திரைக்கதைக்கு உதாரணமானவர், இருளின் நாயகன் என்றெல்லாம் பாராட்டப்படும் ஆங்கில திரைப்பட இயக்குனர் குவெண்டின் டெரெண்டினோ(Quentin Terantino) காமிக்ஸ் ரசிகரே! அவர் தயாரித்து வெளியான இரும்புக்கை மாயாவி (Iron Fists) ஒரு காமிக்ஸ் கதாப்பாத்திரமே! தற்போது ஆங்கில காமிக்ஸ் நிறுவனங்கள் பரவலாக காமிக்ஸை விற்று தீர்த்துக்கொண்டிருக்க, மற்ற நாடுகளிலும் நிறைய சாகச நாயகர்கள் உருவாகியுள்ளனர்.

       உலகமெங்கும் உள்ள நல்ல காமிக்ஸ் பலவற்றை தமிழில் கொண்டுவந்து எனக்கு தீனி போட்ட லயன் காமிக்ஸ் நிறுவனர் திரு S விஜயனுக்கு முதலில் நன்றிகள். லயன் காமிக்ஸ் 29-வது ஆண்டு மலரில் வெளியான ‘கொலை செய்வீர் கனவான்களே’ (GREEN MANOR) நான் படித்த காமிக்ஸிலேயே மிக அற்புதமான ஒரு அனுபவத்தை கொடுத்தது. மனதின் குரூரத்தையும், கொலை செய்ய துடிக்கும் மனோபாவத்தையும் அழகியலாக்கி காட்டும் ஒரு அற்புதமான படைப்பு என்று சொல்லலாம்.

51q2zc0vhml-_sx356_bo1204203200_

       1899 பெத்லகேம் மன நல மருத்துவமனை. டாக்டர்.தார்ன் நோயாளியான தாமஸ் பிலோவுக்கு சிகிச்சை செய்கிறார். தாமஸ் பிலோ தன் காலம் முழுவதும் இலண்டனில் உள்ள க்ரீன் மேனர்(GREEN MANOR) ஹோட்டலில் பட்லராக பணிபுரிந்தவன். தனது கடைசி காலத்தில் திடீரென்று குரூரம் நிறைந்தவனாய், மன நோயாளியாய் மாறியதன் காரணங்களை வெவ்வேறு காலங்களில் ஹோட்டல் க்ரீன் மேனரில் நடந்த கொலை சம்பவங்களைக் கொண்டு விளக்குகிறார் கதையாசிரியர் ஃபேபியன் வெல்மான்(Febian wehlmann). பார்க்க மிடுக்காக சுற்றித் திரியும் இலண்டன் நகரத்து செல்வ சீமான்களின் கொடூரமான மறுமுகம் கொலையின் மீதான ஆர்வமாக வெளிப்படுகிறது.டெரண்டினோவின் ஹாஸ்டல்(HOSTEL 1,2) படத்தின் கதை கரு இப்படியானதுதான். கதை சொல்லலில் இது ஒரு தொடர்பற்ற(Non-Linear) முறைமையாக சொல்லப்படுகிறது.ஒவ்வொரு கதையும் சிறு சிறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஒவ்வொரு கதையிலும் சம்பவிக்கும் அசாத்தியமான கொலைகள், கொலை களங்கள், கொலையின் மீதான திருப்பங்கள் படிக்கும்போது நிறைய ஆச்சர்யங்களை உண்டாக்கியது.ஒவ்வொரு கதையிலும் கொலை,கொலையாளி குறித்த பார்வைகள் மாறுபடுகின்றன.அவை கொலை குறித்த சித்தாந்தத்தை உருவாக்க முயலுகின்றன. மூன்று பாகங்களை கொண்ட இந்த கதையின் மீத இரண்டு பாகங்கள் பின்னாளில் ‘மனதில் மிருகம் வேண்டும்’ என்ற பெயரில் வெளியானது.     

250px-green-manor-vol2                  

 இந்த காமிக்ஸில் மற்றொரு அம்சம் ஓவியங்கள்.ஓவியர் டெனிஸ் பொடார்ட்-ன் சித்திரங்கள்.ஒவ்வொரு கதாபாத்திரத்தின் முகபாவனைகளும் மிக அழகாக நம்மை கதைக்குள் இட்டு செல்கின்றன. கதையின் ஒளியமைப்பு ஆடம்பரத்திற்குள் இருக்கும் அழுகிய மனங்களை வெளிப்படுத்துவதாய் பொலிவற்று, அதே சமயம் ஆடம்பரத்தை, அதன் மிடுக்கை கொணர்வதாயும் உள்ளது.இப்படியெல்லாம் எழுதிவிட்டதால் கதை ரொம்ப பயங்கரமானது, கொடூரமானது என்றெல்லாம் எண்ண வேண்டாம்.நகைச்சுவை,குற்றவியல்,புலனாய்வியல்,அமானுஷ்யம் என்று பல வகைமைபாடுகளுக்குள்ளும் பயணிக்கிறது. உதாரணமாக, உலக புகழ் பெற்ற புலனாய்வியல் புனைவு எழுத்தாளர் கோனன் டாயிலை(ஷெர்லாக் ஹோம்ஸ் என்ற புகழ்பெற்ற புனைவு கதாபாத்திரத்தை உருவாக்கியவர்) இரு செல்வந்த சிகாமணிகள் கொல்ல திட்டமிடுகிறார்கள். அதற்கான சுயவெறுப்பு ஏதுமில்லை. ஒரு பிரபலத்தின் மரணத்தை தாங்கள் முடிவு செய்ய வேண்டும், வரலாற்றில் அப்படிபட்ட மரணம் யாருக்கும் சம்பவித்திருக்க கூடாது,மேலும் வித்தியாசமான கொலைகளை எழுதும் கோனன் டாயில் வித்தியாசமான முறையில் இறப்பது அவருக்கு செய்யும் மரியாதையாக இருக்கும் என்றதொறு வில்லங்கமான ஆசை.அதை செய்ய முடியுமா? என்ற கேள்வி மட்டுமே! எல்லாம் திட்டமிட்டபடி நடந்து கோனன் டாயிலை கொல்ல போகும் கடைசி தருணத்தில் திட்டத்தை கை விட்டு செல்வார்கள்.காரணம் அவர் ஒரு பத்திரிக்கையாளர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்பொது கொல்வதாக திட்டம். அவர் கொல்லப்பட இருப்பது கொடாரிகளாலும், ஏர் கலப்பைகளாலும்! அப்படியிருக்க அவர் நிகழ்ச்சியில் பேசும்போது ஒரு நிருபர் ‘உங்கள் கதைகளில் ஏன் கொலை செய்ய கோடாரி போன்ற ஆயுதங்களை பயன்படுத்துவதில்லை’ என்று கேட்கிறார். அப்படி கொல்வது தனக்கு பிடிக்காது என்று கோனன் டாயில் பதிலுரைக்கிறார். இதை கேட்ட இரு செல்வ சீமான்களும் அவர் கொல்லப்படப்போகும் கடைசி நோடியில் தங்கள் உயிரை பணயம் வைத்து டாயிலை காப்பாற்றுகிறார்கள். அவர்களால் உலக புகழ் பெற்ற கொலை ஒன்றை அரங்கேற்றியிருக்க முடியும். அதுதான் அவர்களின் இலட்சியமும் கூட! ஆனால் இறுதியில் உலக புகழ் பெற்ற கொலையாக இருக்கவேண்டிய ஒன்றை தடுத்து நிறுத்தியது தாங்கள்தான் என்ற மனநிறைவை அடைகின்றனர். இப்படியாக கொலை குறித்த ஒவ்வொருவரின் மனநிலையையும் விவரித்துக்கொண்டே செல்கிறது க்ரீன் மேனர் ஹோட்டலின் பட்லர் சொல்லும் சம்பவங்கள். கொலை செய்யும் வாய்ப்பும், சிக்கிக் கொள்ள மாட்டோம் என்ற நம்பிக்கையும் உண்டாகும் எவனும், யாரையும் கொல்ல தயங்கமாட்டான் என விவரிக்கிறது க்ரீன் மேனர்.

-Yugen Prasanth

Advertisements