எதேச்சையாகதான் நடந்ததா? என யோசிக்கிறேன். ஒரு நாள் இரவு சரியாக தூக்கம் வரவில்லை. என் தம்பியின் லேப்டாப்பை ஆராய்கையில் “வின்னர்” பட காமெடி தட்டுப்பட்டது. எனக்கு வடிவேலு காமெடி என்றாலே ஒரு விருப்பம் உண்டு(கைப்புள்ள தனி விருப்பம்). மட்டுமல்லாது வீட்டில் டி.வி இல்லாததால் வெகுநாள் கழித்து வடிவேலுவை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தேன். மனம் லேசானதும் படுக்க சென்றுவிட்டேன். அப்போது நினைத்துக் கொண்டிருந்தேன்,”வடிவேலு எவ்வளவு பெரிய காமெடியன். திரும்ப எப்ப காமெடியனா வருவாரோ??” மறுநாள் புத்தகங்கள் எடுக்க நூலகத்திற்கு சென்றபோது “வேலு பேசறேன் தாயீ!” என்ற புத்தகம் தட்டுபட எடுத்து படித்து பார்த்தால் வடிவேலுவின் பேச்சு வழக்கிலேயே எழுதப்பட்ட புத்தகம். அதாவது அவள் விகடனில் அவர் எழுதிவந்த பத்திகளின் தொகுப்பு. படிக்க சுவாரஸ்யமாய் தோன்றியதால் எடுத்துக் கொண்டு நடையை கட்டினால், வீட்டுக்கு வரும் வழியில் டீ கடை ஒன்றில் விகடனின் புதிய மாத இதழான “தடம்”. எடுத்து கொஞ்சம் புரட்டினால் வடிவேலுவை பற்றி ஒரு கட்டுரை. “என்னடா இது வடிவேலு வைரஸா?” தடத்தையும் தட்டிக்கொண்டு வந்தாயிற்று. சாவகாசமாய் படித்தும் முடித்துவிட்ட பிறகு, யாருமே படிக்காத என் Blogலும், முகப்புத்தகத்திலும் ஒரு கட்டுரை போடலாம் என ஆர்வம் தோன்றியதும் டைப்படித்தாயிற்று.

இயக்குனர் மிஷ்கின் அடிக்கடி சொல்ல கேட்ட வார்த்தை, “MGR, சிவாஜி இல்லாத சினிமாவ நினைக்க முடியுமா? அவங்களால எத்தன குடும்பங்க சந்தோசமா இருந்துருக்கு..” இந்த வார்த்தைகளை வடிவேலுவுடன் கூட ஒப்பிட்டு பார்க்கலாம். அவரது நகைச்சுவை எத்தனை மக்களை மன உளைச்சலில் இருந்து மீட்டிருக்கிறது. இன்னும் வெளியாகியும் பேர் தெரியாமல் போன பல படங்களில் அவரது காமெடிக்காகவே நினைவில் நிற்கும் படங்களும் உண்டு வெடிகுண்டு முருகேசன் படத்தை பார்க்காதவர்களும் (நானும் பார்க்கல) அலர்ட் ஆறுமுகத்தை நினைவில் வைத்திருப்பது போல. 80களில் இளையராஜா இசையில் என்ற பெயர் போட்டதாலயே ஓடிய படங்கள் உண்டு. அதுபோல வடிவேலுக்காகவே ஓடிய படங்கள் உண்டு. வின்னர் உதாரணம். டி.வி ஷோக்களிலும், திரையுலகிலும் தற்போதைய trend ஆக வடிவேலுவின் பிரபல வசனங்களை டைட்டிலாக வைத்தால் படம் ஹிட் என்ற நம்பிக்கை உள்ளது.

சுபகுணராஜன் சொல்வதுபோல ஒரு நடிகனுக்கேயுரிய “டைமிங், உடல்மொழி, ஒத்திசைவு” ஆகிய கூறுகள் வடிவேலுவிடம் இயல்பாகவே வெளிப்பட்டாலும், நான் அவரிடம் பிரத்யேகமாக காண்பது உடல் மொழி, வசன நடை, முகபாவம் இம்மூன்றிலும் அவர் காட்டும் பல வித்தியாசமான Modulations. அவரை கைப்புள்ள, ஸ்னேக் பாபு, சொன்னான், வெட்டுக்கிளி, புலிகேசி, வண்டு முருகன், வெடிமுத்து, முருகேஷ் என பல வகையான பாத்திரங்களாக காட்டுவது இந்த modulationsதான் என்பது என் கருத்து. வடிவேலு காமெடி பார்க்கும் யாவருக்கும் அந்த காட்சியில் மேற்கண்ட கதாப்பாத்திரங்கள்தான் மனதில் நிற்கிறது. அங்கே வடிவேலு மறைக்கப்பட்டு கதாப்பாத்திரம் வலுப்பெறுகிறது. “தேவர் மகன்” தனக்கு திருப்பு முனையாக அமைந்த படமென வடிவேலுவே கூறியுள்ளார். அதில் அவர் நகைச்சுவை பாத்திரம் என்பதைத் தாண்டி சிறந்த குணசித்திர நடிகனுக்கான அம்சங்களை  வெளிப்படுத்தினார் என (நான் சொல்லலை) திரை விமர்சகர்கள் பலர் கூறினர். உண்மைதான். அதில் வடிவேலுவுக்கென தனி காமெடி காட்சிகள் கிடையாது. அதற்கு முந்தைய படங்களிலும் கவுண்டமணி போன்ற பெரிய நகைச்சுவையாளர்களுடன் வரும் சிறிய பாத்திரத்தையே ஏற்றிருந்தார்.

அப்படியே Intercut-ல் போய் அவர் புத்தகமான “வேலு பேசறேன் தாயீ” புத்தகத்தையும், அது வெளியான காலத்தையும் லைட்டா அலசுவோம். அதாவது தேவையில்லாத அரசியல் பிரச்சினைகளால் சிலரால் “தூக்கியடிக்கப்பட்ட” வடிவேலு திரையுலகைவிட்டு சிறிதுகாலம் பிரிந்திருந்த வேளையில் வெளிவந்ததுதான் இப்புத்தகம் . இந்த புத்தகத்தில் என்னதான் சொல்ல வருகிறார். தூக்க்கியடிக்கப்பட்ட சமாச்சாரத்தை பற்றி அல்ல. அவல் விகடனில் எழுதியதால் தன் வாழ்க்கையில் சந்தித்த கீரை விற்கும் கிழவி முதற்கொண்டு “அவ்வ்வ்வ் தாத்தா” என கிண்டல் செய்த குழந்தை வரைக்கும் தன் வாழ்வியல் அனுபவங்கள் சிலவற்றை பகிர்கிறார். வெளிநாடுகளை சுற்றி வந்து பயண கட்டுரை எழுதும் காலத்தில் கிராமம், கிராமமாக சுற்றி வந்து அம்மனிதர்களை பற்றி சிலாகிக்கிறார். தஸ்தயோவ்ஸ்கி, O. ஹென்றி என்று படிக்காத பாமரன் ஒருவன் தன் பார்த்த மனிதர்களை உளவாங்கி நடிகனான கதையை சொல்கிறான். கிடைத்தால் படித்துதான் பாருங்களேன்.

அப்படியே புத்தகத்திலிருந்து தாவி கட்டுரைக்கு வந்தால்.. வடிவேலு காலத்தில் அவருக்கு இணையாக காமெடியில் வளர்ந்து வந்தவர் நடிகர் விவேக் (எ) விவேகானந்தன்.(விவேக் எனும் ஹிந்தி சொல்லுக்கு விவேகம் என்னும் தமிழ் பொருள் என்பது கொசுறு). அவருடைய நகைச்சுவை காட்சிகள் சமுதாயத்தின் சில போலி பிம்பங்களையும், மூடநம்பிக்கைகளையும் கிண்டல் செய்வதாக அமைந்திருந்தது. குறிப்பிட்ட காலத்தில் அவருடைய காமெடிகள் மீது மக்களுக்கு ஏனோ ஈடுபாடு இல்லாமல் போனது வருத்தமே! வேலுவின் “புலிகேசி” படம் வெளியானதை தொடர்ந்து விவேக்கும் “சொல்லி அடிப்பேன்” போன்ற முயற்சியில் இறங்கினாலும், எதுவும் மக்களிடம் போதிய வரவேற்பை பெறவில்லை. மேலும் “நான்தான் பாலா” போன்ற படங்கள் சில அதிருப்தியான கருத்துகளையும் பெற்றது. வடிவேலு “கருத்து கந்தசாமி”யாக கருத்துகளை சொல்லாவிட்டாலும், குழந்தைகளுக்கு தகாத காட்சி, வசனங்களை முடிந்தளவு தவிர்த்தே வந்திருக்கிறார். தன்னுடைய அதிகப்பட்ச ரசிகர்களே குழந்தைகள்தான் என்பது அவரது சரியான யூகமும் கூட. தேசிய விருது போன்ற எந்த விருதும் வாங்காவிட்டாலும் மக்கள் மனதில் நீக்கமற இடம் பெற்றிருப்பதையே பெரிய விருதாக எண்ணுவதாக சொல்லி சிரிக்கும் வேலு தமிழ் சினிமாவின் ம(று)றக்க இயலாத நகைச்சுவை ஆளுமை . போதும் முடிச்சிப்போம். கட்டுரையை முழுதாக படித்தவர்களுக்கு நன்றி! பாதி வரையாவது படித்தவர்களுக்கு Thanks!

-yugen prasanth

Advertisements