சத்யஜித் ரே-யின் “பதேர் பாஞ்சாலி” திரைப்படத்தை (இன்று வரை) கொண்டாடதவர்கள் இல்லை. நான் விஸ்காம் கோர்ஸில் சேர்ந்தபோதுதான் சத்யஜித்ரே என்ற பெயரை முதல்முறையாக கேள்விபட்டேன். எனது பேராசிரியரும், மற்றவர்களும், அவ்வளவு ஏன்? புத்தகங்களிலும் (குறிப்பாக எஸ்.ராமகிருஷ்ணன்) அவர் படங்களில் மிக சிறந்த படமாக பதேர் பாஞ்சாலியை புகழ்ந்தார்கள். புகழ்ந்தவர்களில் எஸ்.ரா-வை தவிர மற்ற யாவரும் ரே என்னும் சத்யஜித் ரே வின் ஒரு படத்தை கூட பார்த்தது கிடையாது என்பது கொசுறு. சிறக்க பேசிய அந்த படத்தை ஒரு தடவை பார்த்துவிட முடிவு செய்தேன்.வாய்ப்பு கிடைத்தது கல்லூரி மூன்றாமாண்டு படிக்கையில்தான். ஆவலாய் பார்க்க ஆரம்பித்து அரை மணி நேரத்திற்கு மேல் தாக்குபிடிக்க முடியாமல் போனது வேறு சமாச்சாரம். ஆனால் தண்ணி தெளித்து தெளிய அடித்தபோதும் “செம படம்யா..!” என்று சொன்னவர்களைதான் பாராட்டவேண்டும். எதற்கு இவ்வளவு நீட்டி முழங்கல் என்றால் ரே-வுக்கும் எனக்கும் அவ்வளவு தூரம்.காலம்காலமாய் தமிழ் கமர்சியல் சினிமாக்களில் ஊறிய ஆளல்லவா! ஒருநாள் லைப்ரரி சென்றபோது சத்யஜித் ரே-ன் ஃபெலூடா கதை வரிசை புத்தகம். ஓஹோ.. இவர் புத்தகம் கூட எழுதிருக்காரா? என கொண்டுவந்துவிட்டேன். படிக்கமட்டும் 1008 யோசனையில் கிடப்பில் கிடந்த புத்தகத்தை என் தம்பி ஒருநாள் படித்தான். சூப்பரான டிடெக்டிவ் கதை என சான்றிதழ் கூட வழங்கினான். டிடெக்டிவ் கதையா? படிக்கலாமே என உட்கார்ந்தாகிவிட்டது. கொஞ்ச நேரத்தில் இவர்தான் பதேர் பாஞ்சாலி எடுத்த சத்யஜித் ரேவா? என யோசிக்கும்படி ஒரு விறுவிறுப்பான டிடெக்டிவ் கதை!

            கதையை பற்றி கூறும் முன்னர் “ஷெர்லாக் ஹோம்ஸ்” பற்றி கொஞ்சம். நான் ஹோம்ஸின் கதையில் ஒன்றுதான் படித்திருக்கிறேன் (ஃபெலூடாவும் ஒன்று படித்திருப்பதால் சமமாகிவிட்டதாக வைத்துக் கொள்வோம்). ஷெர்லாக்கின் பாணி “இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு?” ஸ்டைலில்தான் இருக்கும். உதாரணத்திற்கு தரையில் பதிந்திருக்கும் ஒரு காலடி தடத்தை கொண்டு மொத்த ஜாதகத்தையும் சொல்லுவார். ஃபெலூடாவின் பாணி தனி. தன்னை சுற்றி நிகழும் சம்பவங்களின் அடிப்படையில் அனைத்தையும் யூகித்துவிடுவார். எதற்கு இந்த ஒப்பீடு என்றால் “வங்கத்தின் ஷெர்லாக் ஹோம்ஸ்” என ஃபெலூடாவை குறிப்பிடுகிறார்கள். (நான் படித்த ஒற்றை கதையை பொறுத்தவரை) இருவருக்குமான டிடெக்டிவ் பாணி, கதைகளம் இரண்டுமே வேறு.

                  கதை என்னவென்றால் ஃபெலூடாவின் நண்பரான லால் மோகன் பாபு எழுதும் “பம்பாய் கொள்ளையர்கள்” நாவலை திரைப்படமாக எடுக்க பம்பாய் படத்தயாரிப்பாளருடன் ஒப்பந்தம் ஆகிறது. தனது நாவலின் திரைப்பட உருவாக்கத்தை காண கல்கத்தாவிலிருந்து ஃபெலூடா, லால்மோகன், மற்றும் நண்பரொருவர்(கதையை சொல்பவர்) பம்பாய் செல்கின்றனர். உள்ளூர் ஆசாமி ஒருவர் பம்பாயில் சேர்ப்பித்துவிடுமாறு பை ஒன்றை லால்மோகனிடம் கொடுக்கிறார். அதில் புத்தகம் ஒன்று இருக்கிறது. பம்பாய் வந்ததும் லால்மோகன் தானே அறியாமல் ஆசாமியின் பைக்கு மாறாக தனது “பம்பாய் கொள்ளையர்கள்” புத்தக பிரதி உள்ள பையை கொடுத்துவிடுகிறார். மேற்கொண்டு அவருடைய நாவலில் எழுதப்பட்ட இடங்கள், சம்பவங்கள் நிஜ உலகில் சம்பவிக்க தொடங்குகிறது. திரைப்பட உருவாக்கத்தை காண வந்தவர்கள் மேற்கொண்டு கொலை சம்பவம், கொள்ளைக்காரர்களின் பின் தொடர்தலில் மாட்டிக்கொள்கிறார்கள். தங்களை பின் தொடர்பவர்கள் யார்? எதற்காக? என்பதை சாதூர்யமாக துப்பறிகிறார் ஃபெலூடா. திரைப்படம் எடுக்கப்பட்டதா? மூவரும் தப்பித்தார்களா? என்பதை மிக விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார் சத்யஜித் ரே. போகிறபோக்கில் பாலிவுட் சினிமாவின் மீதான தனது விமர்சனங்களையும் காமெடியாக சொல்லியிருக்கிறார்.

  • – yugenprasanth
Advertisements