சுமார் 500+ பக்கங்களைக் கொண்ட நாவலை பற்றி ஐந்து பக்கங்களில் சொல்வது கூட சிரமம். கண்டிப்பாக இந்த நாவலை குறித்து கட்டுரை எழுதும் அளவிற்கு எனக்கு அவதானிக்கும் தன்மையோ, எழுதும் திறனோ கூட கிடையாது. ஆனால் அதைத்தாண்டி இந்த நாவலை பற்றி நான் எழுதுவதெல்லாம் ஒரு தூண்டுதலினால்தான். இந்த கோதானம் என்னும் நாவலை படிக்கும் முன்பு எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய “உறுபசி” நாவலை படித்திருந்தேன். உறுபசியை படித்து முடித்ததிலிருந்து எதிர் காலத்தை நினைத்து ஒருவித பயம் குடிக்கொள்ளத் துவங்கியது. வாழ்க்கையே இருண்மை படிந்ததாக நாவலில் வரும் சம்பத் போல போய்விட்டால் என்ன செய்வது என்ற உளைச்சல். அடுத்து என்ன படிக்கலாம்? என கோதானத்தை எடுத்து பார்த்தபோது இதுவும் உறுபசி போல நமக்கு பயம் ஏற்படுத்துவதாய் இருந்துவிட்டால் என்ன செய்வது எனத் தோன்றியது. காரணம் முன்னட்டை வடிவமைப்பில் வறண்ட நிலத்தில் இலைகள் உதிர்ந்து பட்டுப்போய் நிற்கும் ஒரு மரம். எனினும் சிறந்த முதல் பத்து இந்திய நாவல்களில் முதன்மையான நாவல் என குறிப்பிட்டிருந்ததால் படிக்கத் துவங்கினேன். படிக்க ஆரம்பித்த பிறகுதான் தெரிந்தது. பட்டுப்போன மரம் வறுமையையும், துக்கத்தையும் குறிப்பதல்ல. மாறாக ஹோரிராம் என்னும் விவசாயிதான் அந்த பட்டுப்போன மரமாக உருவகப்படுத்தப்படுகிறான் என்று!

1936ல் எழுதப்பட்ட நாவலாக இருந்தாலும் 80 வருடங்களுக்கு பிறகான தற்போதைய காலக்கட்டத்திற்கும் பொருந்தும் நாவல் கோதானம். இந்தியா மீதான பிரேம் சந்த்-ன்  தீர்க்கமான பார்வை பிரமிக்கவைக்கிறது. விவசாயிகளின் உழைப்பு வட்டிக்கடைக்காரர்களாலும், பணம் படைத்தவர்களாலும் சுரண்டப்படுவது, நகரத்தில் தொழிலாளர்களின் உழைப்பு முதளாளிகளால் சுரண்டப்படுதல் என கீழ்த்தட்டு மக்களின் நிலையை விவரிக்கும் அதே சமயம் பணக்காரர்களின் ஆடம்பர வாழ்க்கை, அந்த ஆடம்பரத்திற்கு சர்க்காருக்கு அவர்கள் கொடுக்கும் விலை, அதன் மூலம் தங்களை ஆடம்பரமாக காட்டிக்கொள்ளும் சர்க்கார் அதிகாரிகள் என மறுபுறத்தையும் விவரிக்கிறார் பிரேம் சந்த்.  இது மட்டுமல்லாமல் ஜனநாயகம், விடுதலை, மனோதத்துவம், கிராம வாழ்க்கை, தத்துவங்கள், பெண்ணுரிமை, பெண் சுதந்திரம் குறித்த பிரச்சினைகளை சரியான புரிந்துணர்வுடன் எழுதி இருக்கிறார். கோதானம் ஹோரி ராம் மற்றும் கிராமத்தினர் மூலமாக கிராம வாழ்வையும், அதில் ஏற்படும் சிக்கல்கள், பிரச்சினைகளை அம்மக்கள் எதிர்கொள்ளும் விதத்தையும் எதார்த்தமாக விளக்கியுள்ளார்.

கதையில் சில இடங்களில் குழந்தைகள் திடீர் நோய் தொற்று ஏற்பட்டு இறந்துவிடும் சம்பவங்கள் வரும்போது ஏன் இவ்வாறான சம்பவங்கள்? இரக்கவுணர்ச்சியை ஏற்படுத்தவா? என குழப்பமாக இருந்தது. அப்போதைய காலக்கட்டத்தில் பெரியம்மை நோயின் தாக்கமும் அதனால் ஏற்பட்ட அவலங்களையும் விளக்கியிருக்கிறார் என பின்னர்தான் தெரிந் த து. எந்த இடத்திலும் இரக்கத்தை ஏர்படுத்த வேண்டுமென எழுதாமல் அத்தாண்டிய அவர்களது அயராத தன்னம்பிக்கையை காட்டுவதால் கோதானம் சிறந்த நாவலாக இருக்கிறது. இந்தியாவின் வடதிசை கிராமமொன்றை 100 ஆண்டுகளுக்கு முன்னர் காலப்பயணம் செய்து பார்க்க கோதானம் ஒரு காலயந்திரம்.

Advertisements