அமேசான் இணையத்தளத்தில் புத்தகங்கள் மலிவு விலையில் கிடைக்கின்றது என்று சிறிது நாள் முன்பு கேள்விப்பட்டேன்.தமிழ் புத்தகங்கள் ஏதேனும் கிடைக்குமா? என தேடிகொண்டிருந்த சமயம் மலிவு விலையில் ஏதேனும் காமிக்ஸ் கிடைக்குமா?என அந்த பக்கம் சென்றுபார்த்தப்போது நிறைய காமிக்ஸ் தள்ளுபடியில் வரிசைப்படுத்தப்பட்டிருந்தன.அதில் என்னை கவர்ந்த காமிக்ஸ்தான் Ravana : Roar of the demon king.

சிறுவயதில் ராவணனுக்கு பத்து தலைகள் என பெறியவர்கள் சொல்லும்போது பெரிய ராட்சஸ பூதம் என கற்பனை செய்திருக்கிறேன். பின்னாளில் ராவணன் பத்து தலையுடன் பிறந்தவன் என்றால் அவன் தாய் சுகப்பிரசவத்தில் ஈன்றாளா? அறுவை சிகிச்சை செய்து எடுத்தார்களா? என சிலர் கேளிப்பேசும்போது எப்படி பத்து தலையுடன் பிறந்திருப்பான் என யோசித்திருக்கிறேன்,அப்பொழுதெல்லாம் ராவணனை பற்றிய காமிக்ஸ் எதையும் நான் படித்துருக்கவில்லை.சரி காமிக்ஸ் கதைக்கு வருவோம்.

தசனந்தன்,இலங்கேஸ்வரன்,தசகீரிவன்,தசகந்தன் என எனக்கு பல பெயர்கள் உண்டு.நான் ஒரு அரசன் எனது ஆட்சியால் என் மக்கள் வறுமை,பசி போன்ற சொற்களை அறியாதிருந்தனர். நான் ஒரு வானியல் நிபுணனும் கூட, இந்து மத சோதிடத்தில் ஒரு புத்தகமும் எழுதியுள்ளேன் மட்டுமல்லாது நான் ஒரு இசை கலைஞன், என் சொந்த முயற்சியில் நானே சில ராகங்களையும் ,இசைக்கருவிகளையும் உருவாக்கியுள்ளேன்.இதையெல்லாம் தாண்டி பல நூறு ஆண்டுகளாக இதிகாசங்களில் சித்தரிக்கப்படும் மிக பெரும் வில்லனும் நான்தான் .ராவணன்”.இப்படியாக ராவணன் தன் கதையை தானே சொல்ல தொடங்குவதாக கதை தொடர்கிறது. (ஆங்கில புலமை போதாததால் முடிந்த அளவுக்கு சரியான அர்த்தத்தை தர முயற்சித்துள்ளேன். பிழையிருந்தால் மன்னிக்கவும்.) ராவணன் காமிக்ஸ் முழுவதும் நாம் அறிந்தவையும், அறியாதவையாகவுமான தகவல்கள் நிறைய இருக்கிறது. ஓரிடத்தில் “என் தங்கை மீனாட்சி. முன்கோபக்காரி. கோபம் வந்தால் அவளது கூரிய நகங்களால் எங்கள் தோல்களை பதம் பார்த்துவிடுவாள். அவளை நாங்கள் விளையாட்டாக சூர்பநகை (கூரிய நகமுடையவள்) என்று கிண்டல் செய்வோம்” என்ற வசனம் வரும். அதுவரைக்கும் சூர்பநகையோட உண்மையான பெயர் மீனாட்சி என்று எனக்கு தெரியாது.

இராவணன் அரியணை ஏறும்வரை மெய்சிலிர்க்க வைக்கும் கதை சொல்லல் மீத பகுதிக்கு வழக்கமான இராமாயண கதையாக மாறிவிடுகிறது. சீதையை கடத்தும் இடம் தொடங்கி போர் காட்சிகள் வரை வழக்கமான கேட்ட கதைகளே வருகின்றன. ஆனால் இராவணன் இறக்கும் தருவாயில் இருக்கும்போது அவனது அறிவின் மேன்மை உணர்ந்த ராமன் “ மதிப்பிற்குரியவரே தங்களுடன் தாங்கள் கற்றறிந்த அறிவும், கலையும் அழிவதை நான் விரும்பவில்லை. தாங்கள் அதை எனக்கு போதித்தீர்களானால் நான் அதை இவ்வுலகிற்கு போதிப்போம்” என கேட்க, இராவணன் இராமனை தனது சீடனாக ஏற்றுக்கொண்டு தான் கற்றறிந்தவற்றை போதித்துவிட்டு மடிவார். உண்மையாகவே மயிற்கூச்செரியும் காட்சிகள் அவருடைய ஆத்மா விண்ணகத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் சமயம் இந்த கதை துவங்கும்.

புத்தகத்தின் தரமும், ஓவியங்களும் மிக பிரமாதம். கதையின் இடையே தொய்வு ஏற்பட்டாலும் வலுவான வசனங்கள் ரசிக்க வைக்கின்றன. கதையாசிரியர் அபிமன்யு சிங் சிசொடியா மற்றும் ஓவியர் சச்சின் நாகருக்கும் இந்திய காமிக்ஸ் வட்டத்தில் நல்ல வரவேற்பு இருக்குமென நினைக்கிறேன். ஓவியங்கள் பிரமாதமாக வரையப்பட்டிருந்தாலும் நவீன தொழில்நுட்ப ஒளியமைப்புகள் சில இடங்களில் ஓவியத்தின் தனிதன்மையை தெரியாமல்போக செய்து விடுகின்றன. அதை ஓரளவு சரியாக செய்திருக்கலாம். மேலும் புத்தகத்தின் பின்பகுதியில் இராவணன் உருவாக்கிய இசைக்கருவி, இந்தியாவில் இராவணன் குறித்து நடக்கும் புராதண விழாக்களை பற்றிய குறிப்புகளும் உள்ளது.

பலநூறு வருடங்களாக வில்லனாக சித்தரித்துக்கொண்டிருக்கும் ஒரு நாயகனை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்திட அருமையான காமிக்ஸ் (குழந்தைகள் மட்டும்தான் படிக்க வேண்டுமென அர்த்தம் கிடையாது.) இதுபோன்ற இந்திய இதிகாசம் தொடர்பான காமிக்ஸ்களை Campfire Mythologies என்ற தலைப்பின் கீழ் Campfire Comics நிறுவனம் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. அடுத்ததாக ஏகலைவன் பற்றிய காமிக்ஸ் வாங்கலாம் என எண்ணியுள்ளேன்.

-yugen prasanth

Advertisements